பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 57.7 ‘வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்றும் 'கொல்வா ரேனும் குணம் பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே '’ என்றும் பாடியவர் இப்பொழுது யாகம் செய்யப் பொருள் வேண்டும் என்று கேட்பது சற்று முரண்பாடான செயலாகும். தந்தையார் விரும்பினார். எனவே அதனைப் பெற்றுத் தர வேண்டியது மைந்தனாரின் கடமை என்ற சமாதானம் ஒரளவு பொருந்துமாயினும் இந்த வைதிகர்களைப் பிள்ளையார் இன்னும் கொஞ்சம் வலுவாகச் சாடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இறைவனிடம் பொருள் கேட்டமைக்குக் காரணம் எத்தனை சொன்னாலும் இந்தத் தந்தையார் புரிந்து கொள்ளப் போவது இல்லை. கார்மிகர்கள் எனப்படும் இவர்கள் கர்மங்களைச் செய்வதில் அத்துணை அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள். தம் பிள்ளை செய்யும் அற்புதங்கள் எவையும் அவருடைய நம்பிக்கையை அசைக்க வில்லை. எனவேதான் யாகஞ் செய்யப் பொருள் கேட்கிறார். பெற்ற தந்தை புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, ஏற்ற தந்தையாகிய இறைவனிடம் கூறிக் கேட்கிறார் பிள்ளையார். 'என்னை ஆண்டது உண்மையானால் இதனைத் தந்து தீரல் வேண்டும்' என்ற முறையில் பேசி இறைவனையே இக்கட்டில் விட்டுவிடுகிறார் பிள்ளையார். பொன் தராவிடின் ஆண்டதும் பொய் என்றல்லவா ஆகிவிடும்? எனவேதான் இறைவன் தாமதித்தாயினும் பொன்னைத் தந்து விடுகிறான். பெற்ற தந்தைக்கும் மகனுக்கும் இடையேயுள்ள இந்தக் கருத்து வேறுபாட்டைச் சேக்கிழார் அறியாமல் இல்லை. ஆனால் பிள்ளையாரைப் பெற்ற தந்தையாரை அவர் குறை கூறத் தயாராக இல்லை. மேலும் மன்னிக்க முடியாத பெருங் குற்றமுமன்று இது என்ற கருத்தில் சேக்கிழார் இதைவிட்டு விடுகிறார். பிள்ளையார் செய்த புரட்சியில் இந்த வைதிகர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை - ஆனால் இதே கவிஞர், சிவபாத இருதயர் எத்தகையவர் என்பதை மற்றொரு சந்தருப்பத்தில் விளக்கிக் காட்டி