பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 பெரியபுராணம் - ஓர் ஆய்வு பயன்படுத்தியிருக்க மாட்டார். மூவர் முதலிகள் உபதேசித்த அன்பு வழிபாட்டை முற்றிலும் ஏற்காமல் ஆகம வழிபாடே சிறந்தது எனக் கொண்டவர்களும் இங்கு இருந்தனர். திண்ணனார் வரலாற்றில் பக்திவழியின் உயர்வு பேசப்படுகிறது. அன்பினால், சடங்கு எவையும் இல்லாமல் வழிபடுதல் ஏற்புடைத்தன்று என்றும், ஆகம ரீதியில் வழிபடுதலே ஏற்புடைத் தென்றும் கருதிய இக் கூட்டத்தாரின் பிரதிநிதியாகச் சிவகோசரியார் நிற்கின்றார். விதிமார்க்கம் எனப்படும் இந்த முறை வழிபாட்டினர்க்கும், பக்திமார்க்கம் எனப்படும் கண்ணப்பர் மும்றை வழிபாட்டினர்க்கு உள்ளடங்கிய கருத்து வேறுபாடு இங்கு இருந்தது என்பதில் ஐயமில்லை. இந்த விதிமார்க்க வழிபாட்டினர் அறிவின் துணைகொண்டு இறைவனு டைய அள்ப்பரும் பெருமையையும் மனிதனின் இறப்பு இழிந்த சிறுமையையும் கண்டு, அவன் ஆண்டான் என்றும், உயிர்கள் அவனுக்கு அடிமை என்றும் கருதுபவர்கள். எனவே ஆண்டா னிடம் செல்லும் அடிமை எப்படி ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் தன் பணிவும் அடிமைத்தன்மையும் தெரியும்படி நடந்து கொள்வானோ அதேபோல இறைவனைப் பூசிக்க வேண்டும் என்று கருதுபவர்கள். ஆகம நூல்களில் விதிக்கப்பெற்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அந்த ஆகமம் ஏற்பனவற்றை மட்டும் ஏற்று ஒதுக்குவனவற்றை ஒதுக்கி வாழ்கின்றவர்கள். உயிர்க் காலை புரியும் வேள்விகளை ஆகமம் ஏற்பதில்லை. நாளடைவில் வேள்விக் காரர்களும் உயிர்க்கொலையைத் தவிர்த்தனராயினும் ஆகமவாதிகள் வேதவாதிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. இதன் எதிராக அன்பு மார்க்கத்தினர் இறைவன்மாட்டுக் காதல் கொண்டு தம்மையே அவனிடம் அர்ப்பணம் செய்து விடுவதால் விதி மார்க்கத்தார் கூறும் சட்ட திட்டங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. குழந்தை தாய் என்பவரிடை என்ன சட்ட திட்டம் வேண்டியிருக்கிறது? அன்புவழிப் பட்டார் பிறரைக் குறை கூறுவதில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் எப்படி வேண்டுமானாலும் இறைவனிடம் அன்பு செலுத்தலாம்; வழிபடலாம். இறைவனுக்கு ஏற்றது என்று ஒன்று மில்லை; ஏலாதது என்று ஒன்றும் இல்லை. இவர்கள் விதி மார்க்கத்தாரைக் குறை கூறுவதில்லை என்றாலும் விதிமார்க்கத்தார். இவர்களை எள்ளி நகையாடுவர்; அடாது செய்பவர்கள் என்று பழிபேசுவர். -