பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 84 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விட்டுத் திண்டாடினவர் அல்லர் இவர். சேக்கிழார், புராணக் காரர் கூறுவது போன்று அவகதை படித்துப் பொழுதுபோக்கும் சோழனைத் திருத்தவும், அவன் மனத்தை மாற்றவும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து இதனை இவர் பாட முன்வரவில்லை. சிந்தாமணியைப் போன்ற அழகிய காப்பியத்தில், அதன் காப்பியப் பண்பில் மன்னன் ஈடுபட்டதை மாற்றவேண்டும் என்று இவர் கருதியிருந்தால், திருஞானசம்பந்தர் ஒருவருடைய வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தனிக் காப்பியமாக ஆக்கியிருக்கலாம். காப்பியத்திற்குரிய முழு இலக்கணமும் அமைந்த சிந்தாமணிக்கு எதிராக ஒரு காப்பியம் பாடவேண்டு மாயின் அவர் போலவே ஒரு தனிக் கதையை எடுத்துப் பாடியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த உதிரி வரலாறு களை எடுத்துக் காப்பியமாகப் பாட முற்பட்டார் என்றால் அது சிந்தாமணிக்கு எதிராகப் பாடவேண்டும் என்ற கருத்தால் அன்று என்பதை உறுதியாகக் கூறிவிடலாம். சோழன் ஒருவனை மட்டும் திருத்துவது இவருடைய குறிக் கோளன்று. தமிழகம் முழுவதும் தளர்ந்து நின்று, தன் நிலை யினை அறியாமல் இன்ப வேட்டையில் ஈடுபட்டிருந்தமையின், அத் தமிழகம் முழுவதையும் தட்டி எழுப்பவேண்டும் என்பதே இவருடைய நோக்கமாகும். எனவே சிந்தாமணியைப் படிக்கும் சோழனை மாற்றவே இதனைப் பாடினார் என்ற கருத்து, இந்த நுணுக்கம் புரியாத யாரோ ஒருவரால் புனைந்துரைக்கப்பட்ட தாகும். அப்படியானால் இவ்வளவு தெளிந்த ஒரு காப்பியத்தை இத்தனை இடையூறுகள் இருந்தும் பாடினார் என்றால் இவருக்குக் கவிதை புனையும் ஆற்றல் முன்னரே நிறைந்து இருந்திருத்தல் வேண்டும். இப் பெருநூலை இயற்றுவதன் முன்னர் அவர் வேறு ஏதேனும் செய்யுள் நூல்கள் இயற்றினாரா என்பது போன்ற வினாக்கட்கு விடை கிடைக்கவில்லை. சேக்கிழார் புராணம் என்ற பெயரில் உள்ள நூலும் எவ்வித வரலாற்றுக் குறிப்பையும் தராமல் ஏதோ கற்பனைக் கதை போலப் பாடிச் சென்றுவிட்டது. என்றாலும் இத்தகைய ஒரு பெருநூலை ஆக்குவதன் முன்னர் அக் கவிஞர் பண்பட்ட கவிஞராக இருந்திருத்தல் வேண்டும். பெருநூல்கள் இயற்றா விடினும் இவருடைய கவித் திறத்தை வெளியிடக் கூடிய கவிதை கள் பல இயற்றியிருத்தல் வேண்டும். அவை நமக்குக் கிடைக்க வில்லை. பிறப்பிலேயே பெருங் கவிஞராகப் பிறந்திருந்த இவர் தம் காலத்தில் இருந்த தமிழ் இலக்கிய இலக்கணங்கள் அனைத்தை யும் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். மன்னனின் தலைமை அமைச்சராக இருந்தமையின் பல கல்வெட்டுக்களை