பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 3 97 எனக் கொண்டதனால் செல்வாக்கை இழந்துவிடவில்லை. சிலப்பதிகாரம் இதே காரியத்தைச் செய்து வெற்றியடைய வில்லையா? மணிமேகலை சிறப்பிழந்தமைக்குத் தேர்ந்தெடுத்த காப்பிய நாயகி காரணமன்று; வேறு காரணங்களால் அது செல்வாக்கு இழந்தது. என்றாலும் பின்னர் வந்தவர்கள் இதனை மனத்துட் கொள்ளாமல் காப்பியத் தலைவர்களைத் தேர்தெடுப் பதில் அரசர்களையே கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இதற்கும் இரண்டு காரணங்களை ஊகிக்கலாம். வட நாட்டுக் காப்பியங்கள் அரசர் வாழ்வையே எடுத்தமையின் அந்நாட்டுக் கதைகளை வாங்கிக் கொண்டு காப்பியம் அமைக்க முற்பட்ட திருத்தக்க தேவரும், தோலாமொழித் தேவரும் அரசர் கதைகளையே தேர்ந்தெடுத்தனர். இது தமிழ் மரபுடன் மாறுபட்டுப் புதுவழி வகுப்பதாயிற்று. இவ்வாறு கூறுவதால் அரசர்களைப் பற்றிய காப்பியங்கள் தமிழில் தோன்றவே இல்லை போலும் என்று யாரும் நினைக்கத் தேவையில்லை. மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை என்ற நெடும்பாடல்கள் தோன்றின என்றால் அரசர் பற்றிய காப்பியங்கள் அக்காலத்தில் இருந்திருக்கவேண்டுமென்று கருதுவதில் தவறு இல்லை. இன்று அவை நமக்குக் கிடைக்கவில்லை. காலத்தை வென்று நிலை பெறும் ஆற்றல் அவற்றிற்கு இல்லாமல் இருந்திருக்கவேண்டும். எனவே அவை அழிந்தன. இந்த மரபை மாற்றிக் குடிமகளையும் காப்பியத் தலைவியாக ஆக்கலாம் அல்லது அஃறிணைப் பொருளாகிய சிலம்புகூடக் காப்பியத் தலைமை ஏற்கலாம் என்ற புதுவழி கண்டவர் இளங்கோ. அவரைப்பின்பற்றி ஒன்றிரண்டு நூற்றாண்டின் பின்வந்து அவ்வழிச் சென்றவர் சாத்தனார். தமிழ்நாட்டுக் கதையை எடுத்துக்கொண்டு காப்பியம் அமைத்த இந்த இருவருமே குடிமக்களைக் காப்பியத் தலைமை ஏற்குமாறு செய்தனர். இந்தப் புதுவழியை ஏனோ பின்வந்த தமிழ்க் கவிஞர் கள் போற்றவில்லை. ஆசிரியத்தை விட்டு விருத்தப் பாவை மேற்கொண்டதுபோலக் காப்பிய நாயகர்களையும் வடக்கி லிருந்து கடன் வாங்கினர். இந்தப் பழக்கம் தமிழகத்தைவிட்டு நீங்கவே இல்லை. சிலம்பு, மேகலை என்பவற்றை அடுத்துப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சேக்கிழார் ஒருவரே தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களைக் காப்பியத்தில் பாட எடுத்துக்கொண்டார் என்பதையும் மனத்துட்கொள்ளவேண்டும். இத்தகைய ஒரு நிலைமை ஏன் தமிழகத்தில் இருந்தது? இவ் வினாவிற்கு விடை ஏதும் தெரியவில்லை.