பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 39 9 என்று கூறிவிட்டு மாதவியைவிட்டுக் கோவலன் பிரிந்தான். இந்த நிகழ்ச்சி இக் கணிகையர்ச் சமூகத்தை ஏனையோர் எவ்வாறு நடத்தினர் என்று அறிந்து கொள்ள இடமளிக்கிறது. இங்குத் தொடங்கிய சமுதாயம்-கணிகையர் போராட்டம் மணிமேகலையிலும் தொடரக் காண்கிறோம். இதன் முடிவைச் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், நம்பியாரூரராகிய சுந்தரர், பரவையார் என்ற கணிகையை மணந்த செய்தியில் கான முடிகிறது. இறைவனாலேயே மணம் முடித்துவைக்கப்பெற்ற (சுந்தரர்-பரவையார்) திருமணத்தை அந்நாளையச் சமுதாயம் ஏற்றுக்கொண்டதா? என்பதும் தெரியவில்லை. சேக்கிழாரைப் பொறுத்தமட்டில் வடநாட்டுக் கதைகளைப் பாடிய சிந்தாமணி முதலான காப்பியங்கள் காப்பிய அமைப்பு, கவிதை நயம் என்பவற்றிற்கு ஒரளவு முன்னோடியாக அமைந்து இருக்கலாம். ஆனால் சிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை என்பவற்றில் வரும் தலைவர்கள் யாரும் புலனடக்கம், குறிக்கோள் என்பவற்றில் தலைசிறந்து விளங்கியதாக அக் காப்பியங்கள் காட்டவில்லை. எனவே இக் கதைகள் சேக்கிழாருக்கு முன்னோடி யாக அமைந்திருக்க இயலாது. ஆனால் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த அடியார்கள் வாழ்க்கையைக் காப்பியமாக அமைக்க முயன்ற அவருக்குத் தமிழக மாந்தர்களையே காப்பியத் தலைவர் களாகக் கொண்டு தோன்றிய சிலம்பும், மேகலையும் ஒரளவு வழிகாட்டி இருத்தல் வேண்டும். குடும்பச் சூழலில் விளைந்த குழப்பம், சமுதாயச் சிக்கலில் விளைந்த குழப்பம் என்பவை முறையே சிலம்பு, மேகலை என்பவற்றின் கதை வளர்ச்சிக்கு உதவின என்பதில் ஐயமில்லை. ஆனால் கண்ணகி மணிமேகலை என்ற இருவர் வாழ்க்கையை அக்காப்பியங்கள் அமைத்துள்ள போக்கைச் சேக்கிழார் போன்ற ஒரு மாபெரும் கவிஞர் கவனியாமல் இருந்திருக்க முடியாது. காப்பியக் கவிஞர்கள் கதையை நடத்திச் செல்லும் முறையை அறிந்த பின்னரும் காப்பியம் முழுவதையும் கற்ற பின்னரும் ஒருவருடைய மனத்தில் என்ன எண்ணம் தோன்றுகிறது? மாபெரும் செல்வத்தில் பிறந்தும், ஒரு செல்வனை மணந்தும் வாழ்க்கையைத் துய்க்க முடியாமல் இழந்த ஒரு பெண் தன் நெஞ்சு உரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஒரு மாபெரும் அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகின்றாள். அவள் தொடர்ந்து அடைந்த துன்பங்கள் அவளுடை மனத்தை ஒடித்துவிடவில்லை.