பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6. சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி இவருக்கு முன்னர்த் தோன்றிய எந்தக் காப்பியத்தையும் இவர் பின்பற்றவில்லை சேக்கிழார் வகுத்த காப்பியம் அதற்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்கள் போல் அல்லாமல் தனித்து விளங்கிற்று என்று சென்ற அதிகாரத்தில் கூறப்பெற்றதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். தமிழில் சிலம்பு தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருத்தொண்டர் புராணம்வரை பல காப்பியங்கள் உள. என்றாலும் காப்பியங்கட்கு இலக்கணங் கூறவந்த பாட்டியல் நூல்கள் ஒன்றாவது இங்குள்ள காப்பியங் களை முன்னுதாரணமாகக் கொண்டு இலக்கணம் வரையவில்லை. மாறனலங்காரமும் காப்பிய இலக்கணம் பேசுகையில் வடமொழிக் காப்பிய அடிப்படையில்தான் பேசுகிறது. பாட்டியல் நூல்கள் பிற்காலத்தெழுந்த சிறு பிரபந்தங்களையே பெரிதாகக் கொண்டு இலக்கணம் வரைந்தன. பெரியபுரானப் புற அமைப்பு அன்றிருந்த காப்பியங்களை ஒரளவு தழுவி அமைந்தது சேக்கிழாரைப் பொறுத்தவரை அவர் எடுத்துக் கொண்ட காப்பியப் பொருள் ஒரு பெருங்காப்பியம் அமைப்பதற்கு இடந்தருவதன்று. அவருடைய காலத்தில் சிந்தாமணியும் கம்பனும் மக்கள் மத்தியில் நன்கு பயிலப்பட்டிருந்தன வாகலின் அவற்றின் அமைப்பு முறையை முற்றிலுமாக மாற்றுதல் அவருக்கும் முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே திருத்தொண்டர் புராணத்தின் புற அமைப்பை அன்று வழக்கிலிருந்த காப்பியங்களின் அடிப்படையில் நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு என்ற உறுப்புக்களுடன் அமைக்கின்றார். அவர் முன்னோடியாகக் கொண்ட சிலம்பு, மேகலை என்று இரண்டு காப்பியங்களின் புறக் கட்டமைப்பைச் சேக்கிழார் மேற்கொள்ள முடியாதபடிக் காப்பியங்களின் வடிவம் பத்து நூற்றாண்டுகளில் மாறிவிட்டது.