பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4.2.1 தொண்டின் பல்வேறு வகைப்பட்ட வெளிப்பாடுகளாகவும் செயல் களாகவும் இயங்குமாறு செய்துவிட்டார். காப்பியத்தின் முழுத் தன்மைக்கு ஊறு நேராமல் பார்த்துக்கொண்ட பெருமை காப்பியப் புலவருடையது. தொண்டர்களின் வாழ்க்கை முறை வேறுபாடுகள், செயல்களின் வேறுபாடுகள் என்பவை, பல்சுவை (Variety) ஊட்ட உதவின. காப்பியத்தின் பாவிகமாக அமைந்தது தொண்டின் சிறப்பேயாம். மரபு பற்றி எழுந்த பழைய காப்பியங் கள் தம் உறுப்புக்கள் மூலம் பல்சுவையைத் தந்தன என்பது உண்மை. ஆனால் அதே உறுப்புக்கள் சேக்கிழாரின்கையில் பட்டு அவருடைய முடிவான குறிக்கோளுக்கு உதவின. கதிரவன் உதயம், நிலவின் வெளிப்பாடு, தென்றல், ஆற்றின் ஒட்டம் என்பவை பெரியபுராணத்தில் இடம் பெற்றவுடன் இன்பந்தரும் நிகழ்ச்சிகளாக மட்டும் அமையாமல் புதிய சிறப்பைப்பெற்று அவருடைய குறிக்கோளுக்கு உதவும் இயல்பைப் பெற்றுவிட்டன. இருள் நிலவு என்பவை, 'அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்' 'நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா ' 14 என்ற வடிவைப் பெற்றன. காதலி ஈசன் அருளாக வடிவெடுத் தாள். ‘தேசின் மன்னிஎன் சிந்தைமயக்கிய ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே ' என்று பேசப்பெறுகிறது. ஆற்றின் ஒட்டம், 'அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உன்நெகிழ கருணையின் ஒழுக்கம் போன்றதே ' என்ற முறையில் பேசப்பெறுகிறது. பிற காப்பியங்களில் ஒரு குறிப்பிட்ட, சூழ்நிலையினை உருவாக்கும் ஞாயிறு, திங்கள் தோற்றம், ஆற்றின் ஒட்டம் என்பவை சேக்கிழாரிடம் அகப்பட்டு அதுவரை யாரும் நினைத்திராத சூழ்நிலையை (atmosphere) உருவாக்க உதவின. சமயத் தொடர்பான காப்பியங்கள் என்று பெயர் பெற்றிருந்துங் கூடச் சிந்தாமணி, சூளாமணி, மணிமேகலை என்பன இத்தகைய சூழ்நிலையை எந்த நிலையிலும் உண்டாக்க வில்லை. அவர்கள் பயன்படுத்திய அதே முதல், கருப்பொருள் களை வைத்துக் கொண்டு அதுவரை யாருஞ் செய்திராத புதுமை யைச் செய்ததுதான் சேக்கிழாரின் தனிச் சிறப்பாகும்.