பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி 4 25 வீரம் என்பது அவரது முடிவு. வேறு எத்தகைய தவம், செபம், பூசை முதலியன செய்யாவிடினும் இந்திரியங்களை வென்று யான், எனது எனும் பகையை ஒழித்தவர்களே தொண்டுள்ளம் படைத்தவர்களாக ஆகமுடியும். இந்த வளர்ச்சியை ஒருவர் பெறுகின்ற நிலை வரும்பொழுது அவருக்குப் பகை, நட்பு, வேண்டியவர், வேண்டாதவர் என யாரும் இருக்க முடியாது. யார் தீங்கு செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அனுபவிப்ப துடன் அத் தீங்கை இழைத்தவர்களிடங்கூடக் காழ்ப்புணர்ச்சி (Malice) இல்லாமல் இருப்பர். மன்னிக்கும் இயல்பைவிட இது பல படிகள் மேம்பட்டதாகும். மன்னிக்கும் பொழுது மன்னிக்கப்படுபவர் தாழ்ந்தவராயும் மன்னிப்பவர் உயர்ந்தவ ராகவும் ஆகிவிடுகின்றனர். இந்த வேறுபாட்டுக்கும் இடம் தராத நிலை தான் கீதை கூறும் சமதிருஷ்டி நிலைமை. பெரிய புராணத்தில் வரும் தொண்டர்கள் இந்த நிலையை அடைந்தவர்களேயாவர். இதன்மேலும் ஒருபடி உண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு அதற்காகவே வாழ்ந்தவர்களாவர். என்றாவது அந்தக் கொள்கை அல்லது குறிக்கோளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அடுத்த கணத்தில் உயிரை வைத்திருக்கமாட்டார்கள். இந்தக் கொள்கை அல்லது குறிக்கோளுக்கு வரும் இடையூற்றை எவ்வகையிலும் வெல்ல முற்படுவர். இதுவே அவர்கள் வீரம் என்கிறார் கவிஞர். இந்த வீரத்தை வெளிப்படுத்துவதால் அதிகாரம், செல்வம் என்பவற்றைப் பெற முடியாமல் போகலாம். ஆனால் ஆண்டவனிடம் அவர்கட்குள்ள தொடர்பை இவ்வீரம் வலுப் படுத்துகிறது. உலகியல் முறையில் காட்டப்படும் வீரத்தில் ஒரிரு முறை குறை நேர்ந்தாலும் தவறில்லை. மனிதனுக்குள்ள குறை பாடுகளின் பயனாக இது விளைந்தது என்று கூறி மன்னிக்கப்படும். ஆனால் தொண்டர்களின் போராட்டத்தில் மனிதக் குறை பாட்டிற்காக எவ்விதக் கருணையும் காட்டப்படுவதில்லை. இவர் கள் போராட்டத்தில் ஒரு சிறு குறை நேர்ந்தாலும் வீழ்ந்து விடுவரேயன்றி அதன் பின்னர் அவர்கட்குத் தொண்டர் என்ற தகுதி இருக்கமுடியாது. அதனால் தான் அடியார்கள் வாழ்வு முழுவதும் அவர்கள் எத்தகைய பணியில் ஈடுப்பட்டிருந்தாலும் அது நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சிறப்புடையதாய் அமைகிறது. காப்பிய இலக்கணத்துக்கு ஒத்துவராத உதிரிக்கதைகளை ஒன்று சேர்த்துக் காப்பியம் பாடிவிட்டார். எனவே காப்பிய இலக்கணம் அதில் அமையவில்லை என்று கூறப்புகுவது