பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 435 காணப்பெறும் அடியார் வரலாறுகள் பெரியபுராணத்துக்குப் பெரும்பகுதி மாறுபட்டவையாகும். ஹரிஹரரின் நூல் அப்பகுதி யில் வழங்கிய கதைகட்கு வடிவுகொடுக்க முயன்ற முயற்சி என்றே தோன்றுகிறது. உதாரணமாக ஒரு வரலாற்றைக் காணலாம். 'காரைக்காலம்மையின் கணவனின் பெயர் மாணிக்கஞ் செட்டி என்பதாகும். பேய் வடிவெடுத்த அந்த அம்மை தெருவில் தலையால் நடந்து மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாளும் கயிலைக்குச் செல்லும் வழியில் காரைக்காலம்மையைச் சந்தித்துப் பேசுகின்ற னர். கயிலை மிக நீண்ட தூரத்தில் உள்ளது என்றும் இவர் மெள்ளத் தலையால் நடந்து சென்றால் பலகாலம் ஆகும் என்றுங் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர். உடனே அம்மையார் கண்ணிர் விட்டுக் கதறி அழுகின்றார். அவருடைய கண்ணிர் ஆறாகப் பெருகிக் கைலையைச் சென்று அடைகிறது. இதனைக் கண்ட சிவபெருமான் அந்தக் கண்ணிர் ஆற்றிலேயே அம்மையார் மிதந்து மிகவேகமாகத் தம்மை வந்து அடையும்படிச் செய்கிறார்’ இதுதான் ஹரிஹரரின் காரைக்காலம்மையின் கதையாகும். தமிழகத்திலிருந்து கருநாடகம் செல்வதற்குள் ஒரு வரலாறு எத்தனை மாற்றங்களை அடைய முடியும் என்பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும். சேரமானும், சுந்தரரும் கயிலை செல்கின்றனர் எனக் கேள்வியுற்ற ஒளவையார் தாமும் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தால் மிக வேகமாக விநாயகருக்கு அருச்சனை செய்தார் 'பாட்டி ஏன் இவ்வளவு அவசரம்?' என்று வினாயகர் கேட்டவுடன் ஒளவையார், நம்பி, சேரர் என்ற இருவரும் கயிலை செல்வதைக் குறிப்பிட்டு அவர்களுடன் தாமும் செல்ல வேண்டும் என்ற தம்விருப்பத்தைத் தெரிவித்தார். கஜமுகனார் கவலை வேண்டாம். வழக்கம்போல் அமைதியாகப் பூசையை முடிப்பாயாக’ என்று கூறினவுடன் ஒளவை அப்படியே செய்த தாகவும் பூசை முடிவில் விநாயகர் தம் துதிக்கையால் ஒளவை யாரைத் தூக்கிக் கைலை மலையில் வைத்ததாகவும் தமிழ் நாட்டில் ஒரு செவிவழிக் கதை உண்டு. இந்தக் கதையும் கருநாடகம் சென்றுள்ளது போலும். அங்கு ஒளவையார் காரைக் காலம்மையானார். விநாயகருக்குப் பதிலாக இறைவனே அவரை வரவழைத்தார் என்று கதையைத் திரித்துப் பயன்படுத்தி விட்டனர். நாட்டில் வழங்கிய கதைகட்குக் கவிதை வடிவம் கொடுக்க முன் வந்த ஹரிஹரர் அப்பகுதியில்வழங்கிய கதைகளை அப்படியேஏற்றுக்கொண்டு பாடி விட்டார். w