பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

கனவை இறைவனின் கட்டளையாகவே கருதி மனைவியிடமும் மகனிடமும் கூறினார். தாயும் பிள்ளையும் இறை கட்டளையாகவே இதனை ஏற்றனர். கனவைக் கேட்ட சிறுவர் இஸ்மாயீல் தந்தையை நோக்கி ‘இறைவனின் நாட்டப்படியே, என்னை உங்கள் கையால் அறுத்துப் பலியிடுங்கள்; நான் பொறுமையாக இருப்பேன்’ எனத் தன் தந்தைக்கு தைரியம் கூறித் தன் பூரண சம்மதத்தைத் தெரிவித்தாார்.

தியாகத் திருநாள்
‘ஈதுல் அள்ஹா’ பெருநாள்

இபுறாஹீம் (அலை) தன் குமாரர் இஸ்மாயிலை பலியிடப் போகும்போது இறைவனே அப் பலியைத் தடுத்து நிறுத்தி, அதற்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு பணித்தான். இறைவனுக்காகத் தன் உயிரையே உவப்போடு தரத் துணிந்த இத் தியாகச் சம்பவத்தை நினைவு கூரும் நாளாகத்தான் ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள் உலக முஸ்லிம்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

‘ஹஜ்’

இந் நாள் ஹஜ் பெருநாளாகவும் அமைந்துள்ளது. இபுறாஹீம் நபி அவர்களும் அவர் தம் குமாரர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், உலக மக்கள் அனைவரும் உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென உலகில் முதன் முதலாகக் கட்டப்பட்ட இறையில்லமாகிய மக்காவிலுள்ள கஃபா எனும் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி, உலகெங்கும் வாழும் இறையடியார்கள் இறைவன் பெயரால் கஃபா இறையில்லத்தில்கூடி ‘ஒரே இறைவன்’ என்ற உன்னதக் கொள்கையை செயல் வடிவில் நிறைவேற்ற ஹஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.