பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

சுவை நீர் போன்றவற்றையெல்லாம் உதறித் தள்ளி தியாகம் செய்கிறார். தான் விரும்பி உண்ணும் உணவு வகைகளையும் பருகி மகிழும் சுவை நீர்களையும் துறப்பதோடு பசியின் கொடுமையை பகல் முழுவதும் அனுபவிக்கிறார். இதன் மூலம் ஏழை எளியவர்களின் பசித்துன்பம் எத்தகையதென அறிந்துணர்ந்து, அவர்தம் பசிப்பிணி போக்க விழைகிறார். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் ஈகையாளராக மாறி வாரி வழங்க முற்படுகின்றனர். நோன்பின்போது வணங்குவதும் வழங்குவதுமான உணர்வுகொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வழக்கமான பல்வேறு பழக்கங்களையெல்லாம் தியாகம் செய்தவர்களாகிறார்கள்.

வாரி வழங்க வழி
வகுக்கும் ஜகாத்

ஏழை எளியவர்களுக்கு வசதி படைத்தோர் வாரி வழங்க வேண்டுவது ஆண்டு முழுவதும் கடமையாக அமைந்திருந்தபோதிலும், இப்புனித ரமலானிலே தான் அதிகமாக வழங்கப்படுகிறது. இதை வற்புறுத்துவதே இஸ்லாமிய கடமையான ஏழைவரி எனும் ஜகாத் கடமை. இதுவும் தியாக உணர்வை வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஒவ்வொரு முஸ்லிமும் அரிய முயற்சிகளின் மூலமும் கடும் உழைப்பின் வாயிலாகவும் பொருளைத் தேடி, சேமிக்கிறார். அவ்வாறு தேடிச் சேர்க்கும் பொருளை மேலும் மேலும் சேர்க்கவே விரும்புவார்கள். தான் பாடுபட்டுத் தேடிய பொருளை பாதுகாத்து அனுபவிக்க அவாவுவது மனித இயற்கை. ஆனால், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ‘ஜகாத்’ கடமை, தான் தேடிய பொருளின் மீது கொள்ளும் பண ஆசையை, பொருள் வேட்கையைத் தியாகம் செய்யப் பணிக்கிறது.