பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

மனிதன்மாட்டு இறைவன் விதித்த கட்டளைகளையும் அவற்றை நிறைவேற்ற மனிதனுக்குள்ள கடப்பாடுகளையும் நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நேசத்தையும் அதை முழுமையாக அடைய ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய நல்லுணர்வுகளையும் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டும் புனிதமிகு புத்தாண்டுத் தினமாகவும் உள்ளது. சுருங்கக் கூறின் இஸ்லாமியப் புத்தாண்டு எண்ணிக்கைக்காக மட்டுமின்றி எண்ணத்தை வளர்த்து வளப்படுத்தும் இனிய துவக்க நாளாகவும் அமைந்துள்ளதெனலாம்.

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் புனிதமிகு ‘ஆஷூரா’ (யவ்முல்) தினமாகவும் பேணப்படுகிறது. யவ்முல் ஆஷூரா என்பதற்குப் ‘பத்தாம்’ என்பது பொருளாகும். இந்நாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிலும் அதிஉன்னத நாளாகக் கருதப்படுகிறது. புனித ரமலான் நோன்பு நாட் களுக்கு அடுத்தபடியான சிறப்பு மிக்க நாட்களாக ஆஷூரா நோன்பு நாட்கள் போற்றப்படுகின்றன. ஆஷூரா நோன்பு நாட்கள் ஒராண்டும் தொழுகைக்குச் சமமாகும் எனப் பெருமானார் கூறியுள்ளார்.

பத்து நாள்
நிகழ்வுகள்

முஹர்ரம் பத்தாம் நாளாகிய ஆஷூரா தினத்தன்று பத்து முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

மனித குலத்தின் முதல் தந்தையாகிய ஆதாமும் தாயாகிய ஹவ்வாவும் இந்நாளில் தான் அல்லாஹ்வால் நிலவுலகினில் கால் பதித்தனர். இறைக்கட்டளைக்கு மாறு செய்த அவர்களின் பிழை இறைவனால் பொறுக்கப் பட்டதும் இந்நாளிலே தான்.