பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

பெருமானார் அவர்கள் அதன் ஒரு பகுதியிலே நாளும் அறிவை வளர்க்க, பெருகச் செய்ய ‘மதரஸா’ வையும் உருவாக்கிய அறிவுப் புரட்சிக்கு வித்திட்டார்கள். பள்ளிவாசல்களின் ஒரு பகுதியே பள்ளிக்கூடங்களாயின. அறிவுக்குத் துணை செய்யும்-வளர்க்க வழிகாணும் அனைத்துக் கல்விகளும் அங்கே வளர்க்கப்பட்டன.

இவ்வாறு இன்றைய விஞ்ஞானத்தின் அனைத்து கூறுகளும் வளமாக வளரும் வளர்ப்புப் பண்ணைகளாக அமைந்தவைகளே அன்றைய மதரஸாக்கள் என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத வரலாற்று உண்மைகளாகும்.

‘அறிவு எங்கே இருந்தாலும் அதனைக் கற்றுக்கொள்’ எனப் பணித்த பெருமானாரின் அன்புக் கட்டளைக்கிணங்க, கிரேக்க நாட்டு அறிஞர்களால் வளர்த்து வளமாக்கப்பட்டிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கிரேக்க, லத்தீன் மொழிகளிலிருந்து அரபி மொழியிலே முனைப்பாக மொழிபெயர்க்கப்பட்டன.

அறிவியல் வளர்ச்சிக்கு
அடிப்படை அமைத்த முஸ்லிம்கள்

இதன் விளைவாக ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டுவரை அரபு நாட்டில் விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து வளமடைந்தன. இக்கால கட்டத்திலேதான் பூகோளம், பெளதிகம், இரசாயனம், மருத்துவம் என இன்றுள்ள அறிவியல் துறைகளுக்கெல்லாம் அழுத்தமான அடிப்படைகள் போடப்பட்டன.

இதன் பயனாக, பத்தாம் நூற்றாண்டின் உலகில் இருபெரும் மேதைகளாக அல்-புரூனியும் இப்னு சினாவும் விளங்கி, இன்றைய இயற்பியல், வேதியியல், மருத்துவம், முதலாகவுள்ள அறிவியல் துறைகளின் துரித வளர்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைய முடிந்தது.