பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

காணிக்கையாக்க முனைந்த தியாகச் செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமை இந்நாளில்தான் ஹாஜிகளால் நிறைவேற்றப்படுகிறது. ‘ஹஜ்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும். வசதி படைத்தவர்கட்கு மட்டுமே ஹஜ் கட்டாயக் கடமையாகும். ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜி, மக்காவிலுள்ளள ‘கஃபா’ இறையில்லத்தை நாடிச் செல்கிறார். கஃபா இறையில்லமே தவிர இறைவனல்ல. சதுரவடிவான இக் கட்டடத்தை வலம் வரலாமே தவிர, வணங்கக்கூடாது. இறையடியார்கள் ஆண்டுக்கொருமுறை ஹஜ் செய்ய வேண்டும் என இப்ராஹீம் (அலை) ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு விடுத்த அழைப்பை ஏற்று இன்றும் முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி வருகின்றனர். ‘கஃபா’ என்ற சொல்லுக்கு வட்ட வடிவானது என்று பொருள். சதுரமானது என்ற பொருளும் உண்டு. வட்ட வடிவான நிலப்பரப்பில் சதுர வடிவாக அமைந்த கட்டடமே ‘கஃபா’; 40 அடி நீளமும், 50 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட வெற்றுக் கட்டடமாகும். இதனுள் சென்று இறைவணக்கம் புரியக்கூடாது என்பது விதியாகும். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை ‘கஃபா’ இருக்கும் திக்கு நோக்கியே தொழுகின்றனர். கஃபாவில் தொழுகின்றபோது திசைக்கட்டுப்பாடு ஏதுமின்றி, எத்திக்கில் இருந்தும் தொழலாம்.

‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகள் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கப்பால், தங்கள் வெற்றுடம்பில் தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பில் உடுத்திக் கொண்டு மற்றொரு துண்டை போர்த்திக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முற்படுகிறார்கள்.