பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

“(நபியே) அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (இவ்) வேதத்ததையும் உமக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) அருளப் பெற்றவற்றையும் விசுவாசங்கொள்வார்கள்.” (குர் ஆன் - 2 : 4) என்று திருமறை கூறுவதன் மூலம் அறியலாம்.

இதிலிருந்து, பிற மதங்களை தூஷிப்பது, மதப் பெரியோர்களை அவமதிப்பது, பிற சமய வேதநூல்களை அவமதிப்பது, பிற சமய வேத நூல்களை இழிவு படுத்துவது, வணக்கத் தலங்களை சேதமுறச் செய்வது ஆகிய செயல்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு மாறானவை என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மார்க்கத்தைப் பேணி நடக்க முழு உரிமையுண்டு என இஸ்லாம் விதிக்கிறது. இஸ்லாமிய ஆட்சி நடத்திய முஸ்லிம் மன்னர்கள் பிற சமயச் சடங்குகளில், மத அமைப்பு முறைகளில் தலையிடாமல், அந்தந்த சமயத்தைச் சார்ந்த நீதிபதிகளைக் கொண்டே அவ்வச் சமயப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கச் செய்தனர் என்பது உண்மை வரலாறாகும். இதுவே பெருமானாரும் திருக்குர்ஆன் திருமறையும் காட்டிய வழி.

ஒவ்வொரு மனிதனும்
இறைவனின் பிரதிநிதியே

இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் மாபெரும் சிறப்புக்குரியவனாக மதிக்கப்படுகிறான். இன்னும் சொல்லப்போனால் மனிதன் இறையம்சம் பொருந்தியவனாக உள்ளான். மண்ணுலகில் மனிதன் இறைவனின் பிரநிதியாகவும் கருதப்படுகிறான். ஏனெனில், இறைவன் மனிதனைத் தன்னிலிருந்து படைத்தான்.

மனித குலம் முழுமையின் தோற்றுவாயாக விளங்குபவர்கள் ஆதாமும், ஹவ்வாவும் (ஏவாள்) ஆவர். இவர்கள் மூலம் மனித குலம் தழைத்ததைப் பற்றித் திருக்குர்ஆன்: