பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

நாட்களைப் பின்னர் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். முப்பது நாட்கள் நோன்பு நோற்று முழுமைப் படுத்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகும். இதைப் பற்றி திருமறை:

“நோன்புக் காலத்தில் யாராவது நோயாளியாகவோ அல்லது யாத்திரையிலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்” (2:185) எனக் கூறுகிறது.

இவ்வாறு நோன்பை முழுமையாகக் கடைப்பிடிக்க இஸ்லாம் பணிப்பதையும் முப்பது நாட்கள் தொடர்ச்சியாகப் பகற்பொழுது முழுவதும் உண்ணாமலும் ஒரு சொட்டு நீரையும் பருகாமலும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதை மிகக் கடினமான செயலாகக் கருதி பிற சமயத்தினர் வியக்கின்றனர். அதிலும் மிக இளம் வயதுடைய சின்னஞ் சிறியவர்கட்கு எப்படி இயலுகிறது என ஆச்சரியப்படுகின்றனர். நோன்பு நோற்பது கடுமைமிகு செயலாகப் பிறர்க்குத் தோன்றினும் அதனால் ஆன்மிக அடிப்படையிலும் உளவியல் போக்கிலும் அறிவியல் நோக்கிலும் நோன்பாளிகள் பெறுகின்ற பயன் அளவிறந்ததாகும்.

நோன்பின் அடிப்படை அம்சம்

ஆண்டுதோறும் நோன்பு எனும் சோதனைக் களத்தில் புகுந்து புடம் போட்ட தங்கமாக ஒவ்வொரு முஸ்லிமும் திகழ வழி வகுப்பதே இஸ்லாமிய நோன்பின் அடிப்படை அம்சமாகும்.

யாருக்காக நோன்பு?

நோன்பு வைக்கும் ஒவ்வொரு முஸ்லிம் நோன்பாளியும் இறைவனுக்காக நோன்பு நோற்பதாக உறுதி கொள்கிறான். நாம் நோற்கும் நோன்பால் இறைவனுக்கு எவ் விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. மனிதர்களின்

6