பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

19


“சமுதாய ஏணியின் அடியில்-கீழ்ப்படியில் நான் இருந்தேன். ஆனால், அந்த ஏணியின் மேல் ஏறிச்செல்லவில்லை. அதுதானாகவே என்னை இழுத்து, மேல்நிலையில் வைத்திருக்கிறது. ஆகையால், ஏழை இளைஞர்கள் என் வாழ்க்கையை உதாரணமாகக் கருதி, ஏமாற்றத்துக்கு ஆளாகக்கூடாது என எச்சரிக்கின்றேன். தாழ்ந்த நிலைமை, முன்னேற்றித்தின் முதல்படி என்று தவறாக எண்ணிக் கெட்டுப்போய்விடக் கூடாது”.


வேறு போக்கிடம் இல்லை

(அந்தக் காலத்தில், கலைத்துறையில், முன்னேற்றத்தை விரும்பிய அயர்லாந்துக்காரர் ஒவ்வொருவரும், அயர்லாந்தைவிட்டு வெளியேறுவதையே முதல் கடமையாகக் கொண்டிருந்தனர்.

ஷா லண்டனுக்குப் போய்ச் சேர்ந்ததும் அத்தகைய முயற்சியே ஆகும். ஆனால், லண்டனை மட்டுமே தான் தேர்ந்து எடுக்க வேண்டிய சிறப்பு என்ன?) அவர் கூறுகிறார்:

“விஞ்ஞானமோ இசையோ என் கலையாக இருந்தால் பெர்லினுக்கோ, லிப்சிகோ போயிருப்பேன். ஓவியமாக இருந்தால், பாரிசுக்கு சென்றிருப்பேன். சமயக் கலையாக இருந்தால், ரோம் நகருக்குப் போயிருப்பேன். என் கலைப்பொருள் ஆங்கில மொழியாக இருந்தது. அதனால் லண்டன் நகரம் தவிர வேறு போக்கிடம் எனக்கு இல்லை.”