பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

23


என்றும், மருத்துவ நிபுணர் உயிர் வாழ்க்கையைப்பற்றி தான் முற்றிலும் அறிந்தவர் என்றும், சமயத் தலைவர், சுவர்க்கத்துக்கும் நரகத்திற்கும் உரிய சாவிக்கொத்து தம் கையில் இருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு அவர்கள் நடிக்கிறார்கள். ஆனால் கலைஞராகிய நீங்களோ, நடிகராயினும் ஓவியக் கலைஞராயினும் சரி, அப்படிச்சொல்லி ஏமாற்றி வேறொன்றாக நடிப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.


ஐம்பது ஆண்டுகள்

ரஷ்யாவிலுள்ள பொதுவுடைமைப் போக்குக்கும், தம்முடைய பொதுவுடைமைக் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டு, “ரஷ்யாவின் பொதுவுடைமை ஐம்பது ஆண்டுகளுக்கு பிற்பட்ட நிலையிலே உள்ளது. நான் அதைவிட ஐம்பது ஆண்டுகள் முற்போக்கு அடைந்துள்ளேன்.” என்று ஒருமுறை கூறினார் ஷா.


சிறப்புக்குக் காரணம்

ஷேக்ஸ்பியரைவிட தாம் சிறந்தவர் என்பதை ஷா குறிப்பிடுகிறார்:

“ஷேக்ஸ்பியர் காலத்தில் பிறந்திருந்து, அவரைப் போல நானும் செய்யுள் வடிவில் நாடகங்கள் எழுதியிருப்பேனானால், அவரை நான் சுலபமாக வென்று ஏழையாக்கி இருப்பேன்.”