பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

25




இரண்டுக்கும் வேறுபாடு

பொது மருத்துவ நிலையங்களுக்கும், தனிப்பட்ட மருத்துவ இல்லங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை ஷா கூறுகிறார்:

“பொது மருத்துவ நிலையங்களில், நோயாளியின் நோய் பாதி குணமாகும் முன்பே அவனை நடுத்தெருவுக்குத் துரத்திவிடுகிறார்கள். ஆனால், தனியார் மருத்துவ இல்லங்களில், சாகும் வரையில், அவனை வெளியே அனுப்புவது இல்லை. இதுவே வேறுபாடு.”


உறுதியான தயாரிப்பு

தம்முடைய நாடகங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அச்சிட்ட தொகுதிக்கு முகவுரை எழுதினார் ஷா.

“இவை என் வாழ்நாள் உழைப்பு ஆகையால், இவற்றை ஒருமுறை படித்து, உணர்ந்துவிட முடியும் என்று எண்ணாதீர்கள். என் நூல்கள் அனைத்தையும் ஆண்டுக்கு இரு முறையாக ஏறக்குறைய பத்து ஆண்டுகள் படித்துப் பயில வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் இந்தப் பதிப்பு உங்களுக்காக இவ்வளவு உறுதியாகப் பைண்டு செய்யப்பட்டு வெளிவருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.