பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

39


ஷாவும் அந்த அரங்கில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த ரசிகர் ஒருவர், ஷாவிடம் “மக்கள், ஓகோ என்று புகழும்படி, நாடகம் அவ்வளவு பிராமாதம் அல்ல” என்றார்.

“நீங்கள் கூறுவதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தில் நீங்களும் நானும் சொல்வது எடுபடாதே என்ன செய்வது?” என்றார் ஷா.


வேறு ஆளைத் தேடிக்கொள்

இருபது வயதுப் பெண் ஒருத்தி, ஷாவுடன் ஐந்து ஆண்டுகளாகக் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

இறுதியில், “என்னால் யாருக்கும் பயன் கிடையாது. நான் படு கிழவன்” என்று ஷா அவளுக்கு எழுதியிருந்தார். அவளோ, மேலும் கடிதங்கள் எழுதிக்கொண்டுதான் இருந்தாள்.

பிறகு ஷா தம்முடைய புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி, அதன் பின்புறத்தில் “என் வாழ்க்கை முடிந்துவிட்டது; செத்தமாதிரிதான். வாலிப நண்பர்களைத் தேடிக்கொள்” என்று குறிப்பிட்டிருந்தார்.