பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

73


நோயும் மருத்துவமும்

“நோய்கள் பெருகப் பெருக மருத்துவர்களின் வருமானம் அதிகரிக்கிறதே தவிர, நோய்கள் குறைவதை ஒட்டி அமையவில்லை. அதனால் மக்கள் நோயற்ற வாழ்வு வாழ இயலவில்லை.

சுவீடனில் இருப்பதுபோல் குடும்பத்தில் நோய் பெருகப் பெருக, அந்தக் குடும்பத்து மருத்துவர்களின் வருமானம் குறையுமாறு செய்ய வேண்டும். அப்போது தான் நோய் உண்டாகாமல் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்களுக்கு அக்கறை உண்டாகும்.”


போட்டி மனப்பான்மை

“எந்தத் துறையிலும் போட்டியே இருக்கக்கூடாது; போட்டி ஒழியவேண்டும். சிறப்பாக கல்வித் துறையில் தேர்வு வைத்துப் போட்டியிடச் செய்யும் முறையை ஷா விரும்பவில்லை.

ஒரு மாணவன், மற்றொருவனின் அறியாமையையும் குறையையும், தோல்வியையும் கண்டு மகிழ்ச்சி அடையும் மனப்பான்மைக்கு அந்தத் தேர்வுப் போட்டி இடம் அளிக்கிறது.

மற்றவனை தோல்வியுறச் செய்வதை நோக்கமாகக் கொள்ள கற்பிக்கிறது. இத்தகைய மனப்பான்மை நல்ல சமுதாய அமைப்புக்கு இடையூறாகும்” என்று கூறுகிறார் ஷா.