பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

89


 “ஒரு நிருபர் ஷாவிடம், “நீங்கள் ஏன் மதுவை வெறுக்கிறீர்கள்” என்று கேட்டார்.

“என்னுடைய குடும்பத்தில் இருந்தவர்கள், என்னைப் போல் பலருடைய பங்கையும் சேர்த்து அவர்களே குடித்துத் தீர்த்துவிட்டார்கள். ஆகவே, அதில் எனக்குப் பங்கு இல்லாமல் போய்விட்டது” என்று பதில் அளித்தார் ஷா.


முட்டாள்தனமானவையா?

ஒரு சமயம், கிரேக்க நாட்டின் தலைநகரமான ஏதன்சுக்கு ஷா போயிருந்தார்.

அந்த நகரத்திலே, புராதன காலத்தில், மிக மிகச் சிறந்த கட்டிடங்கள் அனைத்தும் அக்ரோபாலிஸ் என்ற பகுதியில்தான் இருந்தன. இப்பொழுதும்கூட அந்த இடத்தைச் சுற்றுலாப் பயணிகள் போய்ப் பார்த்து மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்கள்.

ஆனால், அங்கே போய்ப் பார்த்துவிட்டு வந்த ஷா கூறுவதாவது:

“கடைசியில் ஏதன்சு நகரத்தின் முட்டாள்தனமான பழைய அக்ரோபாலிஸையும் அதன் இடிந்தத் தூண்களையும் விட்டு ஒரு வழியாக நான் வந்துவிட்டேன்.”