பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




பெரிய தவறு எது?

“நானும் தவறு செய்யக் கூடியவனே. இன்னும் சொல்லப்போனால், பெரிய எழுத்தாளர்கள் தவறு செய்வார்களானால், அந்தத் தவறும் பெரிய தவறாகவே இருக்கும். கொலம்பஸ் செய்த பெரிய தவறுபோலவே இருக்கும்.” (இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவைக் கண்டு இந்தியா என்று. மயங்கியவர் கொலம்பஸ்)


தவறுகளைத் திருத்துதல்

ஷாவின் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் காணப்படும் கிண்டல், கேலி, இகழ்ச்சி ஆகியவற்றை அவரே அறிவார். அவர் கூறுகிறார்:

“என் தொழிலே இதுதான். உங்கள் நிலைமையை அறிந்து, உங்களை நோக்கி, நீங்களே சிரித்துக் கொள்ளும்படி செய்வதே என் நோக்கம். சில வேளைகளில் உங்களை முட்டாள்கள் என்று உணர்ந்து கொள்ளும்படி செய்திருப்பேனானால், அதனாலேயே உங்கள் தவறுகளைக் களைந்து திருத்தியுள்ளேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள். பல் மருத்துவர் உங்கள் பல்லைப் பிடுங்கி எறிந்து, பல்நோயைக் குணப்படுத்தவில்லையா? போன்றதே இதுவும்” என ஒரு முகவுரையில் ஷா கூறுகிறார்.