பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உலக அநுபவம் முதலியன எல்லாம் இதில் அடங்கும். உடம்பிலுள்ள சுரப்பிகளால் (Glands) ஏற்படும் மாறுதல்களைக்கூடச் சிலர் சூழ்நிலையிலேயே சேர்த்துப் பேசுவார்கள்.

பாரம்பரியமா, சூழ்நிலையா - எது திறமைகளுக்கும் தன்மைகளுக்கும் முக்கிய காரணமாயிருக்கிறது என்ற கேள்வியும் அதற்குச் சரியான விடையும் மக்களின் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. பாரம்பரியமே பிரதானம் என்ற கொள்கையைப் பின்பற்றி ஒரு புதிய உயர்ந்த மனித வர்க்கத்தை உண்டாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டார்கள். குறைந்த மதி நுட்பமும், உடற்கட்டும், தீராத தொத்து நோய்களும் உடையவர்களுக்குச் சந்ததியே ஏற்படாதவாறு சாஸ்திர முறையில் தடுத்து விடுவதால் அடுத்து வரும் மக்கள் மேலும் மேலும் உயர்ந்து விளங்குவார்களென்று அவர்கள் நம்பினார்கள். அதே சமயத்தில் அமெரிக்க நாட்டு மனத்தத்துவ நிபுணரான வாட்ஸன் போன்றவர்கள் சூழ்நிலையாலேயே எல்லாம் அமைகின்றனவென்றும், யாருக்கும் எந்த விதமான திறமையையும் உண்டாக்கிவிடலாம் என்றும் முழங்கினர்கள்.

வாட்ஸனுடைய கொள்கையைப் பூர்ணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு சிலருடைய அபிப்பிராயம். சூழ்நிலையாலும், விடா முயற்சியோடு கூடிய பயிற்சியினாலும் ஒருவன் விருப்பமான துறை-