பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அமைகின்றன எனலாம். இதழ்களின் அமைப்பு, கண்களின் வடிவம், பற்களின் வரிசை, தாடை எலும்புகள் எல்லாம் பெற்றோர் தந்தவை, காதுகளின் வடிவங்கூடப் பாரம்பரியமாகக் கிடைக்கிறது என்று பேராசிரியர் விட்னீ கூறுகிறார். கண்களின் நிறமும் அவ்வாறுதான்.

என் நண்பர்களில் ஒருவர் சிறந்த வைத்தியர்; மற்றொருவர் புகழ் பெற்ற எழுத்தாளர். ஆனால் இவர்கள் இருவருடைய பெற்றோர்களும் சாதாரண விவசாயிகளே. அவர்களுடைய குடும்பத்திலே யாருக்காவது அதிகமான கல்வியோ, வேறு கலைத் திறமையோ இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் இவர்களிருவரும் இரு கலைகளில் உயர்ந்து விளங்குகிறார்கள். இவர்களுடைய கலைத் திறமைக்கும் பாரம்பரியத்துக்கும் உள்ள சம்பந்தத்தை ஆராய்வது லேசல்ல.

உடல் அமைப்பிலுங்கூட மேலே கூறியவாறு எளிதாகக் குழந்தைகள் அனைவரிடத்திலும் பாரம்பரியச் சாயலைக் காண்பது கடினம். தந்தை கறுப்பாகவும், தாய் தங்க நிறமாகவும் இருந்தால் குழந்தை எந்த நிறத்தோடு இருக்கும் என நிச்சயமாகக் கூற முடியாது. தந்தையைப் போலக் கறுப்பாக இருக்கலாம்; அல்லது தாயைப் போலத் தங்க நிறமாக இருக்கலாம். அந்த இரண்டு நிறங்களுக்கு மிடையே பலவகையான கலவைகளாகவும் இருக்கலாம்.