பக்கம்:பொங்கற்பரிசு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்தாய் தம்பி!



பொற்கதிர் தொடுவா னத்தே
பூத்தது! தங்கத் தட்டு !
நிற்குமோ எதிர்த்து வந்த
நீள்பகை? மலர்ச்சி கண்டோம் !
நெற்கதிர் பழுத்த தெங்கும்!
பழுத்ததே இன்பம் நெஞ்சில்!
நற்பெருக் கடைந்தோம்! பொங்கல்
நன்னாளை வாழ்த்தாய் தம்பி!1


வீடெல்லாம் புதுமை! மக்கள்
மேலெலாம் புதுப்பொன் னாடை!
காடெலாம் பூக்கள்! ஆற்றங்
கரையெலாம் புள்ளின் பாட்டாம்
காவெலாம் இன்பம்! பொத்தற்
குடிசையி னுள்ளும் இன்பம்!
நாடெலாம் செழிக்க வந்த
நற்பொங்கல் வாழ்த்தாய் தம்பி !2


'பொங்கலோ பொங்கல்’ ஒசை
எழுந்தது! பொங்கல் வாழ்க !
மங்கையர் இல்லந் தோறும்
வந்தவர் போனோர்க் கெல்லாம்
பொங்கலைப் பகிர்ந்த ளித்தார்!
பூரித்தார்! மகிழ்ச்சிக் கூத்தே!
சிங்கமே! சிரித்து வந்த
செங்கதிர் வாழ்த்தாய் தம்பி!3

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/11&oldid=1149019" இலிருந்து மீள்விக்கப்பட்டது