பக்கம்:பொங்கற்பரிசு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செய்ந்நன்றி மறவாதார்!

நீர்க்கோமான் முகிலேவி நெற்பயிரைக் காத்து
நெஞ்சுருக்கும் பசிப்பிணியை யோட்டிவிட்டான் நாட்டில்!
கார்முகிலைக் கிழித்தெறிந்தான் கீழ்த்திசையிற் பரிதி!
கலியாணப் புதுப்பேண்போல் நகைமுகத்திற் சொட்ட
ஊரிலுள்ள குளிர்நடுக்கம் ஓட்டிவிட்டான் ஒளியால்!
உடலெல்லாம் இளவலிமை பெற்றுவிட்ட தின்றே!
பார்மீது செய்ந்நன்றி மறவாதார் தமிழர்!
பலர்மெச்சச் சொல்வதல்ல; உண்மையிது தம்பி!

1

பொக்கைக்கு மண்பூசிப் புதுமெருகு மிட்டார்;
புதுமைசெய்தார்; மஞ்சளினாற் பொட்டிட்டார் கதவில்;
எக்களிப்பில் தமிழ்ப்பெண்கள் தத்தமது வீட்டில்
இலைவிரித்து விளக்கேற்றிக் கொத்துமஞ்சள் வைத்தார்;
மிக்கசுவைக் கரும்புவைத்தார்; பூசணிக்காய்ப் பத்தை
விளைந்தசம்பா நெல்லரிசி புதுப்பானைப் பொங்கல்
பக்கத்தில் எடுத்துவைத்தார்! நன்றிநிறை யுள்ளம்!
பல்குரலில் பொங்கிற்றுப் பொங்கலோ பொங்கல்

2

வீடெல்லாம் புடைசூழ மந்தைவெளி சென்று
வீரமுடன் எருதடக்கி மீண்டுவந்த ஆண்கள்
மாடெல்லாம் பொங்கலன்று குளிப்பாட்டி நிறுத்தி
மலர்சூட்டிக் கொம்பில்நற் காம்பணிகள் பூட்டி
ஓடவிட்டு மகிழ்கின்றார்! இதுதானோ வீரம்?
ஊர்மக்கள் நலம்கேட்கத் 'தட்சணை'கள் எதற்கு?
கூட்டுப்புள் சுதந்தரத்தைக் கோருவதைக் கண்டும்
குத்துக்கல் லாய்த்தமிழர் வாழ்கின்றார் ஏனோ?

3

44
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/52&oldid=1148717" இலிருந்து மீள்விக்கப்பட்டது