பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அசோக சக்கரம் நமது ஆளவந்தாரின் சின்னம், காணாய் என்று உண்மையாகவே, டாக்டரின் பேச்சு, புத்த மார்க்கத்தவருக்குப் புதியதோர் நம்பிக்கையையே கொடுத்திருக்கும். ஆனால்..........!

நடைபெற்றது விழா! பேசப்பட்டது களிப்பூட்டுது சொல்!! மறுக்கமுடியாது!! எனினும், டாக்டர் சொன்னார் படி, புத்தமார்க்கப் பொலிவு தெரிகிறதா? மக்கள் காண்கிறார்களா அந்தப் பொலிவை? அந்தப் பொலிவைக் காண விடுகிறார்களா, மக்களை! உவகையூட்டும் விதமாகப் பேசிய டாக்டரின் பெயரே, ராதாகிருஷ்ணன்! புத்த மார்க்கப் பொலிவா தெரிகிறது? அந்தோ! இல்லையே! அந்தப் பொலிவு இன்று இந்நாட்டிலே இருந்தால், மக்களிடை இத்துணை நலிவு இருக்குமா? இன்று இல்லை, என்பது வருத்தமூட்டுகிறது— பரவாயில்லை—அந்தப் பொலிவை மீண்டும் காண! முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா என்று பார்த்தால், நன்றாகத் தெரிகிறது, முயற்சி எடுத்துக்கொள்ளப் படவில்லை என்பதுமட்டுமல்ல, அந்த நோக்கமே அரும்பிடக் காணோம் என்ற உண்மை—அந்த உண்மை, உள்ளத்திலே வேதனையையல்லவா மூட்டிவிடுகிறது! இந்த நிலையில் டாக்டர், புத்த மார்க்கப் பொலிவு மீண்டும் தெரிகிறது, என்று பேசினது கேட்டால், சிரிப்பதா, பெருமூச்செறிவதா என்று தெரியவில்லை! பெரியவர், டாக்டர்! அவர் கூறுகிறார், மிகச் சாமான்யர்களும் அறிந்திருக்கும் உண்மைக்கு மாறானதை! இருள் கப்பிக்கொண்டிருக்கிறது, டாக்டர் முழு நிலவு காணீர் என்கிறார்! சனாதனம் எக்காளமிடுகிறது டாக்டர் சாக்கியர் தந்த சன்மார்க்கம்; நம் மார்க்கமாகத் திகழ்கிறது என்று உரைத்தார். உண்மை நிலைமை என்ன?