பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை


விட்டீர்களோ வீணர்களே! இங்கே ஒரு பிடி சோறும் உங்களுக்கு இட முடியாது! சாகப்போகும் சடலமடா இது! சோறு போட்டுக் காப்பாற்றுவதா மண்ணாய்ப்போகும் கட்டையை? பசியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! தியாகத்தின் மேன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்! பொறுமையோடு போக மறுத்து அடம் பிடித்துக் கொண்டு இருப்பீர்களானால், அடித்து விரட்டுவேன்! தடிகொண்டு நையப் புடைப்பேன்; நற்பாடம் கற்பிப்பேன்! என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவனை, பாடுபட்டவர்கள், கோபிக்காமல் இருப்பாரா ? கொதிக்காமல் இருப்பாரா ? வாய்ப்பு நேர்ந்தால் அவனுக்கு நல்லபாடம் கற்பிக்காமல் இருப்பாரா ?

இந்தப் பொதுவிதியையும் கடந்து நிற்பது மனுதர்மம்—பிராம்மணிய ஏற்பாடு. இது கண்ணுக்குத் தெரியாத உருக்கிரும்புக் கோட்டை. கடவுள், தலைவிதி, மோட்ச நரகம், முன்ஜென்மப் பின்ஜென்மம் என்ற 'வன்மை மிக்க, காவலாளிகளால் காக்கப்படுவது! எனவேதான், இதனை உடைத்தெறிந்து, புதுநிலையை நாட்டில் தோற்றுவிப்பது என்பது, நினைத்ததும் நடந்து விடக்கூடிய இலகுவான காரியமாக இருக்கவில்லை.

இதன் தாக்குதல் வெளியிலிருந்து வருவது அல்ல; உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்றது. களத்திலே கலங்காத வீரனும், வர்ணாஸ்ரமத்தின் வாடை வீசின விநாடியிலேயே கைகால் நடுக்குறுகிறான்?


39