பக்கம்:பொன் விலங்கு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பொன் விலங்கு

"உனது வறுமையைப் பற்றிய நினைவுகளை நீ ஒரு பக்கம் விட்டுவிடுக. எந்த எந்த வகைகளில் நீ ஏழை? இரண்டு குதிரைகளும் ஒரு வண்டியும் இல்லையென்றோ, அழைத்ததும் ஓடிவந்து முன்நிற்கும் ஏவலாட்களும் பரிவாரமும் உனக்கு இல்லை என்றோ நீ வருந்துகின்றாய். அதனால் என்ன? உனது நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்டப் பிறர்க்காக அல்லும் பகலும் உழைப்பாயாயின், நீ செய்ய முடியாமல் போவது எதுவுமில்லை என்பதை நீயே உணர்வாய்."

எவ்வளவு சக்தி வாய்ந்த கருத்துள்ள வாக்கியங்கள் இவை சத்தியமூர்த்தி நினைக்கலானான்: 'நானும் தான் இந்த வீட்டின் துன்பங்கள் விடிவதற்காக நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால் எங்கு உழைப்பது? எங்காவது எப்படியாவது உழைத்துத்தான் ஆக வேண்டுமென்கிறார் அப்பா. இந்த விதமான இடத்தில் இப்படித்தான் உழைக்க வேண்டும்' என்று நானாகவே மனத்தில் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி நினைப்பதும் எதிர்பார்ப்பதும்தான் என்னுடைய அகம்பாவம் என்று அப்பா அபிப்பிராயப்படுகிறார். இனிமேலும் தொடர்ந்து இந்த வீட்டில் அப்பாவோ மற்றவர்களோ என்னைப்பற்றி இப்படி நினைக்க இடமளித்துக் கொண்டு நான் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. மல்லிகைப்பந்தல் கல்லூரி வேலையாவது எனக்குக் கிடைத்து நான் அங்கே போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அந்த ஊரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் கல்லூரியையும் அதன் அமைப்பு முறைகளையும் நான் விரும்புகிறேன். ஆனால்-அந்தக் கல்லூரி அதிபருக்கும் முதல்வருக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதைத்தான் நான் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிய வில்லைஎன்று, சத்தியமூர்த்தி தனக்குத்தானேமூழ்கிச்சிந்தித்துக்கொண்டிருந்த போது, "சத்யம்! இப்படி வந்துவிட்டுப் போயேன்" என்று உள்புறமிருந்து அம்மா குரல் கொடுத்தாள். புத்தகத்தை மூடிவைத்து விட்டு "இதோ வந்துவிட்டேன் அம்மா." என்று உள்ளே எழுந்து சென்றான் சத்தியமூர்த்தி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/100&oldid=594993" இலிருந்து மீள்விக்கப்பட்டது