பக்கம்:பொன் விலங்கு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பொன் விலங்கு

தைரியத்தை அப்பா அடைந்திருக்கிறார் என்பதை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள் பாரதி.

"என்னம்மா? நீயாகவே சிரித்துக் கொள்கிறாயே?" என்று அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தந்தை அவளைக் கேட்டார். பெண் தன்னோடு பலமுறை மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கு வந்திருந்தாலும் சென்றமாதம் அந்த எஸ்டேட் இருக்கும் மலையின் மேற்குச் சரிவில் இன்னொருவரிடமிருந்து புதிதாக விலைக்கு வாங்கிச் சேர்த்த பகுதியை அவளுக்கு இந்தப் பயணத்தின்போது சுற்றிக்காட்டிவிட வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர்.

தந்தைக்கு ஏதோ மறுமொழி கூறும் பாவனையில் அவள் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசுவதற்கு இருந்தபோது வாசல் பக்கமிருந்து யாரோ காலிங் பெல்லை அழுத்தி அமுக்கினார்கள். அந்த மணி ஓசையைக் கேட்டு அப்பாவின் பேச்சு அளவற்ற உற்சாகத்தோடும் நகைச்சுவையோடும் வெளிப்பட்டது.

"மனுநீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் கெட்டது போ! நியாயம் தேடி வருகிறவர்கள் தன்னைக் கூப்பிட்டு அழைப்பதற்காக இப்படி ஒரு காலிங் பெல் அந்தச் சோழனுடைய அரண்மனை வாசலில் இருந்ததாமே?... அதெல்லாம் கதையிலே படித்திருப்பாயே அம்மா. இந்த மல்லிகைப் பந்தல் அரண்மனை வாசலில் வந்து யாராவது நமது 'காலிங் பெல்'லை அமுக்கினால் ஒன்று சிபாரிசு தேடி வருகிறவர்களாக இருக்கிறார்கள், அல்லது ஏதாவதொரு நிதிக்கு நன்கொடை கேட்டு வருகிறவர்களாக இருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கமாகப் போவதற்காக எழுந்து நடந்தார் பூபதி.

பாரதி தந்தையின் நகைச்சுவையைச் சிரித்து அநுபவித்துக் கொண்டே அவரோடு பின்தொடர்ந்து சென்றாள். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதோ, கூடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதோ, முன்புறத்து வாசலிலிருந்து இந்த மணி ஒலித்து விட்டால் இதை மனு நீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் மணிக்கு ஒப்பிட்டு வாய்நிறையச் சிரிக்காவிட்டால் அப்பாவுக்குப் போது போகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/116&oldid=1356223" இலிருந்து மீள்விக்கப்பட்டது