பக்கம்:பொன் விலங்கு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 197

மறுமுறையும் இதயபூர்வமாக வாழ்த்தினான் அவன். வாசலில் நின்றது. இருந்தது. தயங்கியது, உள்ளே போய் உட்கார்ந்தது. சிற்றுண்டி காப்பி அருந்தியது, பேசியது எல்லாம் நானா இப்படிச் செய்தேன்? நானா இப்படிச் செய்தேன்?' என்று அவன் தன்னைத்தானே நம்பி ஒப்புக் கொள்ள முடியாத காரியங்களாக இருந்தன. நான் எப்படி இவ்வாறு நெகிழ்ந்தேன்?" என்று அவன் தன் இதயத்தைத் தானே கேட்டுச் சோதித்துக்கொள்ளவும் முடியாதபடி மனமே அந்த நெகிழ்ச்சியை விரும்பி அதன் பக்கமாகச் சாய்ந்திருந்தது. அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே கண்ணிரும் மெளனமுமே நிரம்பியிருந்தன. 'கண்ணிராலும் மெளனத்தாலும் அல்லாமல் இதை நான் வேறு எந்தவிதமாக ஏற்றுக் கொள்வேன்? என்ற கவி பைரனின் கவிதை வரிகளைத்தான் அவனால் மீண்டும் சிந்திக்க முடிந்தது. அவளோ அவனுடைய இதயத்தின் நெகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும் படியான வேறொரு வேண்டுகோளுடன் நின்றாள்.

'நீங்கள் ஊருக்குப் போவதற்குமுன் நான் உங்களை இன்னொருமுறை சந்தித்து மனம்விட்டுப் பேசவேண்டும்.'சொற்களால் பேசுவதைவிட நீர் பெருகும் கண்களாலும், மெளனத்தாலுமே அதிகமாகத் தன் அந்தரங்கத்தைப் பேசினாள் அவள். மெளனத்தினாலும், வெறும் பார்வையினாலுமே சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்தவர்களுக்குச்சொற்களால் பேசுவதா பெரிய காரியம்? ஆனால் சொற்களால் பேசுவதற்கு ஒன்றுமே மீதமில்லாததைப்போல் அப்போது அவர்கள் இருவருமே மெளனத்தால் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள், ஒரு நல்ல பூவுக்கு அதன் நிறமும் மணமும் சேர்ந்தே அழகாயிருப்பதைப் போல் துயரமும் மகிழ்ச்சியும் பாதி பாதியாகக் கலந்த மெளனமாயிருந்தது அது. ஒருவருக்கொருவர் - முகத்துக்கு முகம் இமையாமல் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையில் தனியான மகிழ்ச்சியும் இல்லை; தனியான துயரமும் இல்லை. இரண்டுமே கலந்திருந்தது. எந்த விதமாகக் கலந்தால் அழகோ அப்படியே கலந்திருந்தது.

அந்த அழகிய மெளனத்தைச் சத்தியமூர்த்திதான் முதலில்

கலைத்தான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/199&oldid=595209" இலிருந்து மீள்விக்கப்பட்டது