பக்கம்:பொன் விலங்கு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பொன் விலங்கு

இருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவள் வந்தது, நின்றது, அவசரப்படுத்தியது எல்லாம் வியப்புக்குரியனவாயிருந்தன. குளிருக்கு அடக்கமாகக் கிளிப்பச்சை நிறத்துக்கு ஓர் அழகிய கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) அணிந்திருந்தாள் அவள். இடையிலிருந்த வாடாமல்லிகை நிற வாயில் புடவைக்கும், அந்தப் பச்சைச்சட்டைக்கும் இயைபாக அவள் தோன்றிய தோற்றத்தில் ஏதோ ஓர் அழகு பிறந்து அவனைக் கவர்ந்தது.

'ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்தப் பஸ்ஸில்தான் வருவீர்கள். உங்களை அவசியம் சந்திக்க வேண்டும் என்று தவித்துக் கொண்டு பரபரப்போடு ஓடி வந்திருக்கிறேன் நான். நீங்களோ பாராமுகமாகத் தயங்கி நிற்கிறீர்கள்?' என்று அவள் செல்லமாகக் கோபித்துக் கொள்கிற குரலில் அவனைக் கேட்டபோது தனது மெளனமும் தயக்கமும் அந்தப் பேதைப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்துகின்றன என்பது அவனுக்குப் புரிந்தது.

'தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளைக் காலையி லிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக்கொள்வதுதான்முறை இல்லையா?" என்று அவன் சிரித்துக்கொண்டேகேட்டபோது அவள்முகம் வாடிவிட்டது.

'நான் ஏதோ தெருவில் போகிறவள் உங்களை அழைத்து உபசாரம் செய்ய வரவில்லை. நீங்கள் எந்தக் கல்லூரியில் வேலை பார்க்க வந்திருக்கிறீர்களோ அந்தக் கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் வந்து உங்களைக் கூப்பிட்டால் வருவீர்களோ இல்லையோ...?' என்று அவள் கேட்டபோது அவனால் மறுமொழி கூறமுடியவில்லை. அவளுடைய பிடிவாதத்துக்கு முன் அவன் தோற்றான். கூலிக்காரச் சிறுவன் ஒருவனை ஏவி அவனுடைய பெட்டி முதலியவற்றைக் காரில் எடுத்து வைக்கச் செய்தாள் அவள். அவனைக் கல்லூரியில் கொண்டு போய் விட்டு வாட்ச்மேனை எழுப்பித் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த பின்புதான் அவள் வீடு திரும்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/220&oldid=595259" இலிருந்து மீள்விக்கப்பட்டது