பக்கம்:பொன் விலங்கு.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பொன் விலங்கு

வேறொன்றும் இருக்க முடியாது. கண்மூடி உறங்காமல் மனப் போராட்டங்களாலும் எண்ணங்களாலுமே தன்னை மூடிக்கொண்டு உறங்க முயன்ற அந்த இரவுக்குப் பின் மறுநாள் பொழுது புலர்ந்து கல்லூரிக்குச் சென்றபோது மனம்விட்டுப் பேசவும், பழகவும் ஓர் உண்மை நண்பன் கூட இல்லாத சூனியப் பிரதேசமான பாலைவனத்தில் நடமாடுவதைப்போல் ஆளைத் தவிக்கச் செய்யும் ஒரு விதமான தனிமையை சத்தியமூர்த்தி உணர்ந்தான்.

தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரிலிருந்து இன்னும் திரும்பவில்லை. போன இடத்திலிருந்தே தந்தி கொடுத்து லீவை மேலும் இரண்டு நாளைக்கு வளர்த்திருந்தார் அவர் போதாத குறைக்கு அன்று காலையில் அவன் கல்லூரிக்குச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் விடுதியில் தங்கி வசிக்கும் மாணவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் ஹாஸ்டலில் மாணவர்களுக்காக இரவில் கொடுக்கப்படும் பாலைப் பற்றிப் பெரிதாகக் குறை சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் காலையில் குளிப்பதற்கு வெந்நீர், இரவில் பருகுவதற்குப் பால் ஆகியவை வேண்டுமானால், தனியே பணம் கட்டி அவற்றுக்காக கல்லூரியில் அச்சிட்டு வைத்திருக்கும் சீட்டுக்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்நீர் சீட்டுக்களுக்கும், பால் சீட்டுக்களுக்கும், எண்ணெய் நீராடுகிற தினங்களில் எண்ணெய்க்காக வழங்கப்படும் 'ஆயில் டிக்கெட்டு'களுக்கும்'காலேஜ் கரென்ஸி என்று பெயர் சூட்டியிருந்தார்கள் குறும்புக்கார மாணவர்கள். ஒவ்வொரு மாதமும் இருபது தேதிக்கு மேலாகிவிட்டால் இந்தக் கரென்ஸி க்கு மதிப்பு அதிகமாகிவிடும். வெந்நீர்க் கரென்ஸி தீர்ந்து போனவன் அடுத்த அறைப் பையனிடம் நாலணாக் கரென்ஸியை எட்டனாவுக்கு உயர்த்திப் 'பிகு செய்வான். அவசரத் தேவைக்காக மாணவர்கள் இந்தக் கரென்ஸி'யை விற்பதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/320&oldid=595479" இலிருந்து மீள்விக்கப்பட்டது