பக்கம்:பொன் விலங்கு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 61

இருக்கையிலிருந்து அந்தக் குரல் ஒலிகள் வலுத்து அவனை எழுப்பின. கண் விழித்துப் பார்த்தபோது வண்டிக்குள் புதிதாக யாரோ பிரயாணிகள் ஏறி இருப்பதாய்த் தெரிந்தது. பலகையில் எழுந்து உட்கார்ந்து கீழ்ப்புறமாகக் குனிந்து வார்த்தைகளாலேயே ஒருவருக்கொருவர் சாடிக் கொள்ளும் அந்த விநோதப் பிரயாணிகள் யாரென்று பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தும் அப்படிச் செய்யாமல் படுத்திருந்தபடியே அவர்களுடைய உரையாடலை உற்றுக் கேட்டான் சத்தியமூர்த்தி, நடுநடுவே ஏதோ நாட்டிய மேடையில் கேட்கிறாற்போலச் சலங்கை ஒலிகளும், கண்ணாடி வளைகளின் ஒலிகளும் வேறு கேட்டன. சத்தியமூர்த்தியின் தூக்கம் நிச்சயமாகக் கலைந்தே போய்விட்டது. வாக்குவாதம் வலுத்துச் சண்டை போடுகிற தொனியில் பேசிய குரல்கள் இரண்டும் பெண்களுடையவையாயிருந்தன. அவர்கள் அந்த நிலையத்தில் தான் ஏறியிருக்க வேண்டும் என்று அவன் அநுமானம் செய்ய முடிந்தது. இரண்டு பெண் குரல்களில் சற்றே வயது மூத்து முதிர்ந்ததாக ஒலித்த குரல் கண்டிப்பும் அதிகார மிடுக்கும் பொருந்தியதாக இருந்தது.

'வெட்கங் கெட்ட மூளி! நீ இப்படிச் செய்யலாமா? இதே மாதிரிப் போய்க்கிட்டிருந்தா நீ பிழைச்சு உருப்பட்டாப்போலத்தான் போ...'

இதற்குப் பதிலுரைத்த இளையகுரல் வீணையின் தந்தியை மெதுவாக வருடினாற்போல் இனிமையும் நளினமும் இங்கிதமும் மென்மையும் இழைந்து மெல்லச் சீறியது.

“இப்படி மானங்கெட்டுப் பிழைக்கிறதுக்கு எங்கேயாவது ஆற்றிலே குளத்திலே விழுந்து செத்தா நல்லது. நீயா என்னைக் கொல்லப் போகிறதில்லே; நானாகச் சாகவிடவும் போகிறதில்லே. இப்படியேதான் தொடர்ந்து நீ என்னைச் சித்திரவதை செய்து கிட்டிருக்கப் போறே..."

இப்படி ஒலித்த இந்தச் சொற்களின் தொடர்ச்சியாகவே வளைகளும் சலங்கைகளும் குலுங்கி ஒலித்ததனால் அவைகளை இந்தச் சொற்களுக்குரியவள்தான் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. இரயில்பெட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/63&oldid=595895" இலிருந்து மீள்விக்கப்பட்டது