பக்கம்:பொன் விலங்கு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 69

இரயில் சந்திப்புகளுக்கு வரவேற்பு கிடையாது, விடை பெறுதலும் கிடையாது - இருக்கவும் கூடாது. ஆனால் சில சந்திப்புகள் மனத்தில் பதிந்துகொள்கின்றனவே! அப்படிப் பதிவாகிய சந்திப்புகள் நம்மையும் அறியாமலே நாம் ஏதோ ஒர் உறவைக் கற்பித்துக் கொள்ளும்படி செய்துவிடுகின்றன. தன்னைப் பொறுத்தவரை தானும் இன்று அப்படி யார் மேலோ ஏதோ ஒர் உறவைக் கற்பித்துக் கொண்டு விட்டதைசத்தியமூர்த்தி உணர்ந்தான்.

அவன் பிளாட்பாரத்தில் இறங்கிச் சிறிது தொலைவுதான் நடந்திருப்பான். அதற்குள் இவன் முற்றிலும் எதிர்பாராத கேள்வி யோடு எதிர்பாராத மனிதர் ஒருவர் அவனைச் சந்தித்தார். அந்தக் கேள்வியைக் கேட்ட விதமும் கேட்டுவிட்டு அவர் அவனைப் பார்த்த பார்வையும் சிரித்த சிரிப்பும் சத்தியமூர்த்தியை என்னவோ செய்தன!

“என்னடா சத்தியம்? இவர்களை உனக்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்? ரொம்ப நாட்களாகப் பழக்கம் போலிருக்கிறது..?"

"இவர்களை என்றால் எவர்களை?"

"அதுதான் இரயிலில் உன்கூடவந்தார்களே அவர்களைத்தான் சொல்கிறேன். இரயில் பிளாட்பாரத்தில் நுழையும்போதே உன்னை நான் பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராகச் சொல்லி வைத்தாற்போல் உங்கள் வண்டி வந்தது...அது சரி...பாதிராத்திரிக்கு மேல் இப்படி எங்கேயிருந்து பயணம் புறப்பட்டு வருகிறாய் இவர்களோடு...?"

இதைக் கேட்டு சத்தியமூர்த்திக்குச் சினமும் திகைப்பும்மாறி மாறி ஏற்பட்டன. அந்த மனிதரை எரித்து விடுவதுபோல் பார்த்தான் அவன். மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸிஸ் என்று சொன்னால் அதன் உரிமையாளர் கண்ணாயிரத்தை எல்லோருமே தயங்காமல் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு நாலாவது வீட்டிலோ ஐந்தாவது வீட்டிலோ குடியிருந்தார் அவர் . வெற்றிலை பாக்கை மென்று அசை போடுவதற்கும் அடுத்தபடி வம்புகளையும் வதந்திகளையும் அசை போடுவதில் மன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/71&oldid=595965" இலிருந்து மீள்விக்கப்பட்டது