பக்கம்:பொன் விலங்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

7

நாளைக்குப் பொழுது விடிந்தால் சரியாகப் பத்து மணிக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரி இண்டர்வியூவுக்குப் போய் நிற்க வேண்டும் அவன். காலையில் முதல் பஸ் ஏழுமணிக்கோ ஏழே கால் மணிக்கோ இருப்பதாகச் சொன்னார்கள். அதில் இடம் கிடைத்துப் புறப்பட்டுப் போனால் பத்து மணிக்கு மேல்தான் மல்லிகைப் பந்தலுக்கே போய்ச் சேர முடியும். இண்டர்வியூவுக்குப் போகுமுன் குளித்து உடைமாற்றிக் கொள்ளக்கூட நேரமிருக்காது.

மலைநாட்டு நகரமான மல்லிகைப் பந்தலைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒர் இலட்சியக் கலைக் கல்லூரி நடத்திவரும் தொழிலதிபர் பூபதியைப் பற்றிச் சத்தியமூர்த்தி நிறைய கேள்விப்பட்டிருந்தான். கண்டிப்பும் கண்ணியமும் உள்ளவராகச் சொல்லப்படும் அந்தப் பெரிய மனிதர் இண்டர்வியூவுக்குத் தாமதமாக வந்து நிற்கும் ஒரு விரிவுரையாளனைப் பற்றி என்ன நினைப்பார்? இதை நினைத்துப் பார்க்கும் போதே மனம் வேதனைப்பட்டது அவனுக்கு.

நான்கு புறமும் பச்சை வெல்வெட் பதித்த நகைப்பெட்டிக்குள் கிடக்கும் முத்தாரத்தைப்போல் ஏலமும், காப்பியும், தேயிலையும், கொக்கோவும், தேக்கும், ரப்பரும் விளையக்கூடிய வளமான மேற்கு மலைத் தொடரின் சரிவில் பள்ளத்தாக்கினிடையே அமைந்திருக்கும் அந்த அழகிய ஊரில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற முடியாமல் இழந்துவிட நேருமோ என்று எண்ணியபோது அந்த இழப்பை வெறும் நினைப்பளவில் ஏற்றுக் கொள்ளக்கூடத் தயங்கியது அவன் மனம்.

தன் இலட்சியத்துக்கும் மனப்பான்மைகளுக்கும் ஒத்துவராது என்ற காரணத்தினால் எத்தனையோ பல நல்ல வேலைகளுக்கு அவனே முயற்சி செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறான். திருமணமாகாத தங்கைகள் இருவரும் மூத்துத் தளர்ந்த பெற்றோரும் தன் கையை எதிர்பார்த்துக் குடும்பத்தின் தேவைகளை முன் வைத்துக் காத்துக் கொண்டிருப்பதும் வயிற்றைப் பணயம் வைத்து வாழ வேண்டிய அவசியமும் ஒருபுறம் இருந்தாலும், மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை அவனே மனம் விரும்பி அடைய முயன்றான். அவனுக்கே அதில் ஒர் ஆசை இருந்தது.

"முக்கியமான ஊர்களில் பெரிய ஒட்டல்கள் இருப்பது போலத்தான் கல்லூரிகளும் இருக்கின்றன. மேற்கு நாடுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/9&oldid=1405618" இலிருந்து மீள்விக்கப்பட்டது