பக்கம்:பொன் விலங்கு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 91

ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்துகொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடிதத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வேர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார்மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்திய மானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறபோதே தான் எவ்வாறு இப்படித்துணிந்தோம்? இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது?" என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொண்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்தபின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்புதான் தனது கூந்தலின் உள்முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத் தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது என்ற முக்கியமான பிரச்சினைஎல்லா முக்கியமான பிரச்சினைகளும்-வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜைமேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/93&oldid=595989" இலிருந்து மீள்விக்கப்பட்டது