பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவிய முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் “தமிழ் மக்கள் தங்கள் வாழ்வு வளம்பெற அனைத்துக் கல்வியையும் குறிப்பாகப் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியைத் தமிழ்மூலம் கற்கத் தேவையான உதவிகளைச் செய்வது இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்” என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பைத் தனது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்வழித் தொழிற்கல்விக்கான ஒரு திட்டத்தை வகுத்தது. அதனடிப்படையில் பொறியியல், மருத்துவப் பாடநூல்கள் உருவாக்கப்பட்டன. இப்பாட நூல்களை எழுதும் ஆசிரியர்களுக்கு உதவிபுரியும் வகையில் இப்பல்கலைக்கழகத்தின் அறிவியல்தமிழ் வளர்ச்சித்துறை அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்களை, ஏற்கனவே வெளியாகியுள்ள நூல்கள், அகராதிகள், இதழ்கள் என்ற வகையில் 147 மூலங்களிலிருந்து திரட்டித் தொகுத்து உருளச்சிட்டு வெளியிட்டது. இந்தக் கலைச்சொற்களோடு பாடநூல் எழுதிய ஆசிரியர்கள் தேவைகருதி நூற்றுக்கணக்கான கலைச் சொற்களைப் படைத்துக்கொண்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட அனைத்துக் கலைச்சொற்களையும் தொகுத்து அறிவியல் மற்றும் மொழி வல்லுநர்களைக் கொண்டு தரப்படுத்துதற்காக ஒருசில செயலரங்குகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டன. அவர்கள் தரப்படுத்தித் தந்த கலைச்சொற்களே இந்த அகராதியில் இடம்பெறுகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும்போது காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவற்றின் பொருத்தம் கருதி அவை அடுத்தடுத்த பதிப்புகளில் இடம்பெறும். அச்செயலரங்குகளில் பங்குகொண்டோர்.