பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ⚫ போதி மாதவன்

வெளியேயெடுத்தார். அக்காட்சி புற்றிலிருந்து பளபளப் பான பாம்பு வெளியேறுவது போல் இருந்தது. நவரத்தினங்கள் பதித்துத் தங்கப் பிடியுடன் விளங்கிய அந்த வாளைச் சித்தார்த்தர் தலைக்கு மேல் உயர்த்தித் தமது தலைமுடியைத் தலைப்பாகையோடு சேர்த்து அறுத்தெடுத்து, அதனை இடது கையால் ஆகாயத்திலே எறிந்து விட்டார்.[1]

நகைகள் ஒழிந்தன; முடிமணி ஒழிந்தது; மெல்லிய மஸ்லின்’ தலைப்பாகையும் காற்றிலே பறந்து விட்டது; அரச குமாரரின் அழகுக்கேற்ற இந்திர நீலம் போன்ற குஞ்சியும் வெட்டப்பெற்று விட்டது. மற்ற உடைகளையும் களைந்து விட்டுக் காஷாய உடை அணியவேண்டியது ஒன்றே எஞ்சியிருந்தது.


  1. ஆகாயத்திலே எறியப்பெற்ற முடி தரைக்கு வரு முன்பே தேவர்கள் அதைக் கையில் ஏந்திச் சென்று தேவ லோகத்தில் அதற்கு வழிபாடுகள் செய்தனராம்! அதற்கென்று ஒரு சேதியம் கட்டப்பெற்றதென்றும் கூறுவர். அன்று அநோம நதிக்கரையிலே சித்தார்த்தர் முடியை அறுத்தெறிந்த பின்பு அடர்ந்து வளர்ந்திருந்த அவருடைய தலை ரோமம் கத்தரித்த அளவிலேயே நின்று விட்டது என்றும், பின்னால் ஐம்பது வருட காலத்திலும் அது வளரவேயில்லை என்றும், அதனாலேயே புத்தருடைய சிலைகளிலெல்லாம் தலையில் எழுத்தாணிக் கொண்டைகள் போன்ற முடிச்சுக்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் திருப்பியனுப்பிய நகைகளைப் பின்னால் அவருடைய சிற்றன்னை ஒரு குளத்தில் எறித்ததாகவும், அந்தக் குளம் ‘ஆபரண புஷ்கரணி’ என்ற பெயருடன் புண்ணிய தீர்த்தமாகிவிட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.