பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 105

புல்லை மட்டும் உண்டு வந்தனர். சிலர், பாம்புகள் காற்று வாங்குவது போல், வாயுவை மட்டும் பருகி வந்தனர். சிலர் நெருப்பிலே நின்று தவம் செய்து வந்தனர். சிலர் நீரிலே நின்று தவம் செய்து வந்தனர். சடை முடி தாங்கிய வேறு சிலர் வேத கீதங்களுடன் அக்கினியை வழிபட்டு வந்தனர். உடல்களுக்குக் கொடிய துன்பங்களை இழைத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் எல்லோரும் சுவர்க்கத்தை அடையலாம் என்று நம்பிக் கொண்டிருப்பதாகப் பார்க்கவர் கூறினார்.

கேவலம் சுவர்க்கத்திற்காக மட்டும் அவர்கள் அத்தனை பாடுகள் படுவதைப் பற்றிச் சித்தார்த்தர் சிந்தித்துப் பார்த்தார். எல்லா உலகங்களையும் போல், சுவர்க்கமும் மாறுதலுக்கு உட்பட்டதே என்றும், அந்தத் தாபதர்கள் அடைவது அற்பமான இலாபமே என்றும் அவர் எண்ணினார். அவருடைய பரிசீலனையில் தோன்றிய கருத்துக்களை அவர் தமக்குத் தாமே கூறிக் கொண்டார்: ‘வனத்திலிருந்து தவம் செய்து இவர்கள் பெறப் போவது மீண்டும் தவம் புரியத்தக்க வனமே யாகும். உயிர்வாழ்வில் அடங்கியிருக்கும் தீமைகளை ஆராய்ந்து அறியாமல், ஆசை காரணமாகத் தவங்கள் என்ற பெயருடன் வேதனைக்குள்ளாக்குதல், வேதனையைக் கொடுத்து வேதனையையே விலைக்கு வாங்குதல் போன்றது. உலக வாழ்வில் ஆசை கொண்டவர்களும், சுவர்க்க போகத்தில் ஆசை கொண்டவர்களும், எல்லோரும் தம் இலட்சியத்தை அடைய முடியாமல் துன்பத்திலேயே வீழ்கிறார்கள்.

‘பவித்திரமான உணவினால் புண்ணியம் கிடைத்து விடும் என்றால் புல்லைத் தின்னும் மான்களும் புண்ணிய மூர்த்திகளே! வேண்டுமென்றே உடலுக்குத் துன்பம் கேடு தன் புண்ணியம் என்றால், இன்பம் தேடுதலையே

போ -7