பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 109

சாதுரியமில்லாத மூட நண்பனைப் பார்க்கிலும், புத்திமானான பகைவனே மேலானவன்! உனது செயலால் அரச வமிசத்திற்கே தாங்க முடியாத துயரம் வந்து சேர்ந்துவிட்டது. அரண்மனைப் பெண்கள் அனைவரும் அழுது அரற்றுகின்றனர். அடுக்கடுக்காக அமைந்துள்ள இந்த அரண்மனைகளே அழுகின்றனவே!......பரிகளிற் சிறந்த கண்டகமுமா என் குடியைக் கெடுக்க வேண்டும்! நள்ளிரவில் திருடர்கள் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வதுபோல், அது என் நாயகத்தைக் கொண்டு சென்று விட்டதே! போரிலே வாள்களும், வாளிகளும் தாக்கும் போதெல்லாம் தாங்கிய கண்டகம், எதற்காகப் பயந்து என் கோமானைச் சுமந்து சென்று விட்டது?’

சந்தகன் அழுது தேம்புகின்ற தேவியைக் கண்டு, துயரம் தாங்காமல், நிகழ்ந்த செய்திகளை விவரமாகக் கூறினான்: ‘எல்லாம் தேவர் செயல்! விதியின் கூற்று! என் செயல்களுக்கும் நான் பொறுப்பில்லை. என்னைச் செய்யும்படி தூண்டிய ஏதோ ஒரு சக்தியின் கருவியாக நான் இருந்தேன்! - அரண்மனைக் கதவுகளையும், கோட்டைக் கதவுகளையும் திறந்து விட்டு, அடைத்தது யார்? கண்டகத்தின் குளம்புகள் தரையை மிதித்தால் ஓசை கேட்குமென்று அவை தரையில் தோயாமலே ஓடும்படி செய்தது யார்? அரசர் நியமித்துள்ள ஆயிரக் கணக்கான காவலாளிகளும் ஒரே சமயத்தில் உறங்கிக் கிடந்ததன் காரணம் என்ன? காட்டுக்குப் போனவுடன் தேவர் உலகிலிருந்து காஷாய உடையைக் கொண்டு மிக வேகமாக ஒருவன் ஓடி வந்து அண்ணலிடம் கொடுத்ததற்கு என்ன காரணம்? என்னையும் கண்டகத்தையும் குறை கூறுதல் வீண் பழியேயாகும்!’

இளவரசர் தவம் செய்யப் போகும்போது பண்டைக் காலத்து அரசரைப் போல் தன்னையும் வனத்திற்கு ஏன் அழைத்துப் போகவில்லை என்று யசோதரை ஏங்கினாள்.