பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ⚫ போதி மாதவன்

டவர்களே காலத்தைக் கவனிக்க வேண்டும் என்றும், பேரின்பமாகிய விடுதலைக்கு எக்காலமும் நற்காலந்தான் என்றும், காலத்திலே தோன்றும் பொருள்கள் யாவும் அழிந்தொழியும் இயல்புள்ளவை என்றும், மரணம் காலத்தின்மீது முழு ஆதிக்கியம் பெற்றிருப்பதால், மரணத்தை ஒழித்தால்தான் காலமும் மறையும் என்றும் எடுத்துரைத்தார். முடிவாக அவர் கூறியதாவது : பொன்மயமான அரண்மனை. தீப்பற்றி எரிவதாக எனக்குத் தோன்றுகிறது; அங்கேயுள்ள அறுசுவை உண்டிகள் நஞ்சு கலந்தவையாகத் தோன்றுகின்றன. மலரணை முதலைகள் நிறைந்த பொய்கையாகக் காட்சியளிக்கிறது.

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்திற்கு இருப்பிடம்; புத்திமான்கள் அங்கே வசிக்க மாட்டார்கள்.

‘அரசாட்சியையும் புலன் இன்பங்களையும் நான் புறக்கணித்து விட்டேன். சாந்தி நிறைந்த இந்த வனங்களை விட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து, இரவும் பகலும் என் பாவ மூட்டைகளைப் பெருக்கிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மேலும் சாக்கிய மரபிலே தோன்றிய நான் முன் வைத்த காலைப் பின்வாங்குவது ஏளனமான இழி செயலாகும். மேலே துவராடையுடனும், அகத்திலே இன்பங்களில் ஆசையுடனும், நான் அரண்மனையிலே வேடதாரியாக நடித்துக் கொண்டிருக்க இயலாது. வேண்டாம் என்று நான் உமிழ்ந்து விட்ட எச்சிலை மீண்டும் துய்க்க விரும்புவது முறையாகுமா? தீப்பற்றி எரியும் வீட்டிலிருந்து தப்பியவன் மீண்டும் அதன் நெருப்பிடையே புகுவதற்கு விரும்புவானா? பிறப்பு, முதுமை, இறப்பு ஆகிய தீமைகளைக் கண்டு, அவைகளால் விளை யும் துக்கத்திலிருந்து தப்புவதற்காகத் துறவியான நான், மீண்டும் அவைகளுடன் குலாவிக் கொண்டு வாழ முடியுமா?