பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் இயல்

பிம்பிசாரர்

‘பாக சாலையில் பக்குவம் செய்தும்,
யாக சாலையில் எரிவாய் ஊட்டியும்
பலவா(ம்) உயிரின் குலவே(ர்) அறுத்தல்
பழியும் பாவமும் பயக்கும் செயலாம்.’

–கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

செல்வ நெடு மாடங்கள் நிறைந்த இராஜகிருக நகரைச் சுற்றி ஐந்து பெருங்குன்றுகள் அரண்களாக அமைந்திருந்தன. அந்நகர் மகத நாட்டின் தலைநகர், சிரேணிய[1] பிம்பிசாரர் அங்கிருந்து கொண்டு தமது நல்லர சாட்சியை நடத்தி வந்தார்.

அடவி, மலை ஆறுகளையெல்லாம் கடந்து கௌதமர் செய்துவந்த யாத்திரையில் கடைசியாக இராஜகிருக நகரை அடுத்த இரத்தினகிரி என்ற குன்றில் வந்து சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கேயுள்ள சோலைகளில், பல தபசிகள் தங்கள் உடல்களை மிகவும் வருத்திக் கோரமான தவங்களைச் செய்து கொண்டிருந்தனர். கூர்மையான கற்களின்மீது படுத்தும், சுடலையில் தங்கியும், சருகுகளைப் புசித்தும், ஒற்றைக் காலால் நின்றும் அவர்கள் பல முறைகளில் தங்கள் சடலங்களை வதைத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளையெல்லாம் பார்த்த கௌதமர், வாழ்வின் துயரங்களே தாங்கமுடியாமல் இருக்கையில்


  1. சிரேணியர் - போர்த்திறல் வாய்ந்தவர் என்பதைக் குறிக்கும் பட்டம்.