பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 125

சொல்லிவிட்டு, மீண்டும் மலையருகே தாம் வாழ்ந்துவந்த குகையை நோக்கிச் சென்று விட்டார்.

சிரேணிய மன்னர் சித்தார்த்தருடைய துறவை எண்ணிக் கவலைப்பட்டார். இளம் வயதிலேயே, மணி முடி துறந்து, காவியுடுத்து முண்டிதமான தலையுடன் ஒளியுடன் விளங்கிய உருவத்தை அவர் சிறிது நேரம் கூட மறக்க முடியவில்லை. மறு நாட் காலை, அவர் மந்திர மறையோர்களையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு கௌதமரைத் தரிசித்து வருவதற்காக வனத்தை நோக்கிப் புறப்பட்டார்.

பிம்பிசாரரின் வேண்டுகோள்

மலையின் மீது ஒரு மரத்தின் நிழலில் அசலம்[1] போல அசைவில்லாமல் அமர்ந்திருந்த கௌதமரைக் கண்டு அவர் வணங்கி விட்டு, அருகேயிருந்த ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டு, தம் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அவரிடம் வெளியிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘சாக்கிய குல தீபமே! தங்கள் மரபுக்கும் எனக்கும் நெருங்கிய உறவு உண்டு. தங்கள் சூரிய வமிசத்தின் பெருமையை, நான் அறிவேன். அந்த வமிசத்திலே உதித்து, இளமையும் எழிலும் கொண்ட தாங்கள், நாட்டை ஆளும் கடமையை விட்டுத் துறவு பூண்டு வந்திருப்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. இந்த விரக்தி தங்களுக்கு எப்படி வந்தது? முரட்டுத் துணிகளைத் தாங்கள் எப்படி அணிய முடிகிறது? பல வீடுகளில் வாங்கும் கேவலமான பிச்சை உணவைத் தாங்கள் எப்படி வெறுப்பின்றி உண்ண முடிகிறது?’ எனக் கேட்டார்.


  1. அசலம்- சலனமில்லாத மலை.