பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ⚫ போதி மாதவன்

‘உலகத்தையெல்லாம் வென்ற மன்னனுக்கும் தங்குவதற்கு ஒரு நகரமே தேவை; வசிப்பதற்கு ஒரு மாளிகை தான் தேவை; உணவும் உடுக்கையும் அவ்வாறே அற்பத் தேவையில் அடங்கிவிடுகின்றன. மற்றைப்படி மன்னர்க் குரிய வரிசைகள் யாவும் வெறும் ஆடம்பரங்களே! ஆதலால் - அரசாட்சி என்பது பிறருக்காக நாம் மேற்கொள்ளும் உழைப்பேயாகும்.

‘இராஜ்யம் இல்லாமலே எனக்குத் திருப்தி ஏற்பட்டுள்ளது. திருப்தியுள்ள இடத்தில் பேதங்கள் மறையும். உண்மையான இன்பத்தை அடையும் நெடுந் தருமப் பாதையிலே செல்பவனை அற்ப இன்பங்கள் ஏமாற்ற முடியாது.

‘நண்பரே! பிச்சையெடுத்து வாழும் துறவியைக்கண்டு இரங்குதல் வேண்டாம். அவனே பாக்கியசாலி! முதுமை யையும் மரணத்தையும் வெற்றி கொள்ளும் பாதையிலே செல்லும் அவனே, இவ்வுலகில் இணையற்ற ஆனந்தத்தையும் சாந்தியையும் அனுபவிப்பான். மறுமையிலும் அவனுக்குத் துன்பங்களில்லை.

‘இம்மையிலே பெருஞ் செல்வத்தின் நடுவிலும் ஆசை அடங்காமல், சாந்தியில்லாது சஞ்சலப்படுவோனுக்கே நாம் இரங்கவேண்டும். மறுமையிலும் அவனுக்கு வேதனையே காத்து நிற்கும்.

‘தாங்கள் கூறிய கூற்றுக்கள் தங்கள் பெருமைக்கும், பண்புக்கும், வாழ்க்கைக்கும், தங்களுடைய மாண்புடைய மரபுக்கும் ஏற்புடையவை; என் தீர்மானத்தை நிறைவேற்றுவதே என் பெருமைக்கும், பண்புக்கும், வாழ்க்கைக்கும், மரபுக்கும் ஏற்புடையவை.

‘ஆதலால் இந்திர லோகத்தை ஆளும் பேற்றினைக் கூட நான் ஏற்றுக்கொள்ள இயலாது. முதுமையும், பயமும், பிறப்பும், இறப்பும், சோகமும், துயரமும்