பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 137

உருத்திரகர்

அடுத்தாற் போல் அவர் உருத்திரக முனிவரிடம் சென்று உபதேசம் கேட்டார். உருத்திரகரும் அன்போடு அழைத்து அருகே யிருத்திக் கொண்டு, தமக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

கருமத்தைப் பற்றி அவர் வற்புறுத்திக் கூறினார். மக்களின் குண வேறுபாடுகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், செல்வ நிலைக்கும், விதிக்கும் அவர்களுடைய கருமமே காரணம் என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மையும் தீமையும் ஏற்படுகின்றன என்றும், ஆன்மா புனர்ஜன்மங்கள் எடுப்பதும் கருமத்தின் விளைவு என்றும் அவர் விளக்கிக் கூறினார்.

கௌதமர் மறுபிறப்புப் பற்றியும் கருமத்தைப் பற்றியும் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தார். அவற்றின் உண்மையை அலசி உணர்ந்து கொண்டார். ‘கரும விதி மறுக்க முடியாததே; ஆனால் அகங்காரம்–ஆன்மா–பற்றிய கொள்கைக்கு அடிப்படையில்லை’ என்று கருதினார். குருவிடம் அவர் கூறியதாவது :

‘இயற்கையிலே எல்லாம் காரண–காரியத் தொடர்புடன் இருப்பது போலவே மனிதனின் வாழ்க்கையும் அவ்விதிக்கு உட்பட்டிருக்கிறது. முந்தி விதைத்ததை நிகழ் காலத்தில் அறுவடை செய்கிறோம்; எதிர்காலம் நிகழ் காலத்தின் விளைவேயாகும். ஆயினும் மாற்றமில்லாத அகங்காரமாகிய ஆன்மா ஒன்று உளது என்பதற்கும், அது ஒரே படித்தாக இருந்து கொண்டு உடல்கள் தோறும் தங்கி வருகின்றது என்பதற்கும் ஆதாரம் எதுவுமில்லை.

'நான் என்று கருதும் தனிப்பான்மை பொருள்களின் சேர்க்கையாலேயே எனக்கு ஏற்பட்டிருக்கின்றது; என்

போ -9