பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 13

அவ்வரசி தன்னைச் சுற்றியிருந்த மக்களனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர்களின் துயரங்களைக் களைந்து வந்தாள். கௌதமிக்கு அவளிடம் பொறாமையிருந்து வந்தது. இவ்விருவருக்கும் நெடுங்காலம் மக்கட்பேறில்லாததால், மன்னரும், தமக்குப் பின்னால் தமது குலத்தை விளக்க ஒரு குழந்தையில்லையேயென்று, வருந்தி வந்தார். அந்நிலையில், அவரும் அவருடைய தேவியரும் செய்த தவத்தாலோ, மாநிலமே செய்த மாதவ மகிமையாலோ, மாயாதேவி, தனது நாற்பத்தைந்தாவது வயதில் கருவுற்றாள். வையகத்தின் வாட்டத்தை யெல்லாம் மாற்ற வந்த புத்தரே அவ்வம்மையின் மணிவயிற்றிலே கோயில் கொண்டிருந்தார்.

புத்தர் பூமியில் தோன்றுவதற்குரிய காரணத்தையும், விவரத்தையும் புராணக்கதைகள் பலவகையாக விரித்துக் கூறுகின்றன. கௌதம புத்தருக்கு முன்னால் உலகில் ஆறு புத்தர்கள் அவதரித்தனரென்று ‘மகாபதான சூத்திர'த்திலும், இருபத்து நான்கு புத்தர்கள் இருந்ததாகப் ‘புத்த வம்ச'த்திலும், ஐம்பத்து நான்கு புத்தர்கள் என்று ‘லலித விஸ்தர'த்திலும், நூற்றுக்கு மேற்பட்டவரென்று, ‘மகா வஸ்து’ விலும் கூறப்படுகிறது. ‘மணிமேகலை’ ‘எண்ணில் புத்தர்கள்’ என்று கூறும். இது எவ்வாறிருப்பினும், சரித்திரம் ஒப்புக் கொண்டு மக்கள் நினைவிலிருந்துவரும் புத்தர் கௌதம புத்தர் ஒருவரே. பௌத்த நூல்களின்படி இனிவரப்போகும் புத்தர் மைத்திரேய புத்தர்.

கௌதமர் முன்னம் ஒரு பிறவியில் தீபங்கரரென்ற குருவின் முன்னிலையில் தாம் புத்தராகத் தோன்றவேண்டு மென்று உறுதி செய்துகொண்டு, பின்பு தெய்வலோகங்களுள் ஒன்றாகிய துஷித உலகில் இருந்து வந்தார். தெய்வ லோகங்களிலுள்ளவர்களுக்கும், தேவர்களுக்கும், மற்றும் யாவருக்குமே பிறப்பும் இறப்பும், இன்பமும் துன்பமும் உண்டென்பது பௌத்த நூல்களின் கூற்று.