பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ⚫ போதி மாதவன்

மனம் சலிப்படையவில்லை. மேலும் மேலும் மூச்சையடக்கிப் பழகியதால், அவர் தலையில் தாங்கமுடியாத வேதனை உண்டாயிற்று; வாயு வயிற்றைத் துளைத்தது; கசாப்புக்காரன் கூர்மையான கத்தியால் எருதின் வயிற்றைக் கிழிப்பது போன்ற வலி ஏற்பட்டது. மேலும் மூச்சை அடக்கியதில் தீக் கங்குகளிலே உடலைப் போட்டு வதக்தவதுபோன்ற கொடிய எரிச்சல் உண்டாயிற்று. அந்த நிலையிலும் அவர் மன உறுதியைக் கைவிடவில்லை.

அப்போது தேவர்கள் சிலர், ‘துறவி கௌதமர் மாண்டு போனார்!’ என்றனர். சிலர், ‘இறக்கவில்லை ; இறக்கும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறார்!’ என்றனர். ஆனால் மற்றைத் தேவர்கள், ‘கௌதமர் இறக்கவுமில்லை; இறக்கும் நிலையை அடையவுமில்லை. துறவி கௌதமர் ஓர் அருகத்து. அருகத்தின் நிலை இது தான்!’ என்றனர்.

இதன் பிறகு கௌதமர் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார். முதலில் சொற்ப ஆகாரத்துடன் ஆரம்பித்துப் பின்பு அறவே நிறுத்திவிட்டார். அந்தக் கொடிய விரதத்தினால் விளைந்த பயனை அவர் மொழிகளிலேயே கூறிவிடுதல் நலமாகும்:

‘என் உடல் முற்றிலும் தளர்ந்து போகும் நிலையை அடைந்தது. போஷிப்பு இல்லாததால் அங்கங்கள் நாணல் குச்சிகளைப் போல் ஆகி விட்டன. பின்புறத்துச் சதைகள் வற்றி எருதின் குளம்பு போல் ஆகிவிட்டன. முதுகெலும்பும் போஷிப்பின்றி முடிச்சு முடிச்சாக வெளியே துருத்திக் கொண்டிருந்தது. வளர்ச்சிக்கு இடமில்லாமல், என் விலா எலும்புகள், இடிந்துபோன வீட்டுக் கூரையின் குச்சிகள் இங்கொன்று அங்கொன்றாகக் குறுக்கிலும் நெடுக்கிலும் வீழ்ந்து