பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 165

அஷ்டாங்க மார்க்கம்

நான்காவது வாய்மை துக்க நீக்க வழி. இந்த வழி: எட்டுப் பிரிவுகளையுடைய அஷ்டாங்க மார்க்கம். சத்தியத்தின் முன்பு அகங்காரம் ஒழிந்து, செய்ய வேண்டியதை அறிந்து நிறைவேற்றுவதற்குச் சித்த 1 உறுதி கொண்டு தன் கடமையைச் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இருப்பவன் விடுதலை அடைவான். அறிவுள்ளவன் இந்த வழியைப் பின்பற்றி, தானமும் சீலமும் மேற்கொண்டு, துக்கத்தை ஒழித்து விடுவான்.

அஷ்டாங்க மார்க்கத்தின் பிரிவுகள் இவை:

நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி.

பன்னிரண்டு நிதானங்கள்

இறப்பு பிறப்புக்களின் ஆரம்பத்தைப் பற்றிச் சிந்திக்கையில் கௌதமர் சகல தீமைகளுக்கும் பேதமையே அடிப்படையாக இருப்பதை அறிந்து கொண்டார். பிறப்பு ஏற்படுவதற்குக் காரணமான பேதமை முதலிய பன்னிரண்டு சார்புகள் (நிதானங்கள்) இவை:

பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப் பயன். இவை, சங்கிலிக்கோவை போல், ஒன்றோடொன்று தொடர்புடையவை.

வாழ்க்கை ஏற்படு முன்பு ஜீவன்களின் ஆரம்பத்தில் (அறிவின்மையாகிய) பேதைமையே நிறைந்துள்ளது. அந்தப் பேதைமை வெள்ளத்தில், பின்னால் நாமமும் உருவும் கொள்ளத்தக்க நுண்மையான தேட்டங்களின்